அம்பாறை மாவட்ட சிறுபோக விவசாயிகளுக்கு உர மானிய பணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமநல சேவை அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக, பிரதேச கமக்கார அமைப்புக்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சிறுபோக விவசாயிகளுக்கு இம்முறை இரசாயன உரக்கொள்வனவுக்காக ஏக்கருக்கு ரூ. 06 ஆயிரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பிரதேச கமக்காரர் அமைப்புக்கள் விவசாயிகள் தொடர்பான தகவல்களைப் பெற்று, சம்மந்தப்பட்ட கமநல அபிவிருத்தி அலுவலகங்களுக்கு வழங்கி வருகின்றன.
உரமானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வைப்புச்செய்யப்படவுள்ளது. இதற்கேற்ற வகையில். விவசாயிகளின் பெயர் விபரம், விலாசம், நெற்காணி அமைந்துள்ள பிரதேசம், செய்கை பண்ணப்படும் நெற்காணியின் அளவு, காணி உரிமம், வங்கி கணக்கிலக்கம் போன்ற முக்கிய விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் விவசாயிகளுக்கு அரசாங்கம் உரமானியமாக பணம் வழங்காது, சலுகை விலையில் உரம் விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையொன்று விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சந்தையில் விற்பனை செய்யப்படும் உரத்தில் நம்பிக்கையற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பெரும் போகத்தின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சில தனியார் விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்த உரம் விவசாயிகளுக்கு நிறைவாகப் பயனளிக்கவில்லை. இதனால் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியேற்பட்டது.
தற்காலத்தில் உர விலை அதிகரித்துக் காணப்படுவதனால், கலப்படங்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. விவசாயிகள் மத்தியில் உர வகைகள் தொடர்பில் நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளது. ஆகையால், விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் கலப்படமற்ற, தரமான உர வகைகளை விநியோகிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி TKN

0 comments:
Post a Comment