(முஹம்மட்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், தூய காங்கிரசின் முக்கியஸ்தருமான ஐ.எல்.நசீர்(DIG) இன்று (14) தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவை அவரது கிழக்கு வாசல் இல்லத்தில் சந்தித்து, அவர் முன்னிலையில் நசீர் இணைந்து கொண்டார். இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரசிக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான DIG நசீர், அக் கட்சித்தலைவர் மீது அதிருப்தியுற்று சில மாதகாலமாக தூய காங்கிரசில் இணைந்து செயற்பட்டார். அத்துடன் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கவும் அரும்பாடுபட்டார்.
இந்நிலையில், தூய காங்கிரசினர் முஸ்லிம் கூட்டமைப்பு எனும் போர்வையில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டமையினால் அவர்களின் செயற்பாடு குறித்து அதிருப்தியுற்ற நசீர் தேசிய காங்கிரசில் இணைந்துகொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் மற்றும் தே.கா.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment