பிரதான செய்திகள்

சுதந்திரக்கட்சிக்கு வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் சுபையிர்

புதிய முறையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அரசியல் வியாபாரிகளுக்கும், இனவாதத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்களுக்கும் சாதாகமாக அமைந்துள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று மஸ்ஜிதுல் ஹுஸைன் பள்ளிவாசலுக்கு தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வில் (21) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண சபை ஊடாக எனக்கு கிடைக்கப்பெற்ற நிதிகளில் அதிகமானவற்றை வணக்கஸ்தலங்களுக்கும், கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கும் மிகவும் திட்டமிட்டு ஒதுக்கீடு செய்துள்ளேன். அந்த வகையில் ஏறாவூர் பற்று மஸ்ஜிதுல் ஹுஸைன் பள்ளிவாசலுக்கும் தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கு 75ஆயிரம் ரூபா நிதியினை ஒதுக்கினேன். குறிப்பாக கல்வி, கலாசார மற்றும் விளையாட்டுத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் எனது நிதிகளை பகிர்ந்தளித்துள்ளேன்.

குறிப்பாக புதிய முறையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அரசியல் வியாபாரிகளுக்கும், இனவாதத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்களுக்கும் சாதாகமாக அமைந்துள்ளது. குறித்த தேர்தலின் மூலம் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சினைகளையும் சகல கட்சிகளும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது விசேடமாக ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மூன்று முஸ்லிம் வட்டாரங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெற்றனர். இது எம்மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலே அந்த மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். தேர்தலின் போது எமது கட்சிக்கு வாக்களித்த அத்தனை உள்ளங்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் நம்பிக்கையோடு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்கள் வீன்போகாத வகையில் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னின்று உழைப்பேன்.

அதேபோன்று கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது ஏறாவூர் நகர சபைக்கு நானும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட்டேன். அந்தப் பிரதேசத்தின் 10வட்டாரங்களிலும் எமது கட்சி போட்டியிட்ட போதும் நான் போட்டியிட்ட வட்டாரத்தினை மாத்திரம் கைப்பற்ற முடிந்தது. மேலும் அந்தப்பிரதேசத்தின் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் எமக்கு பட்டியலூடாகவும் இரண்டு ஆசனங்கள் கிடைத்தது.

ஆனால் ஏறாவூர் நகர சபையில் தனித்து ஆட்சியமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையினை பெற்றிருக்காததனால் கூட்டாசிக்கான சந்தர்ப்பமே காணப்பட்டது. அதற்காக சகல கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளிலும், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது. அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவிசாளரை பெற்றுக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்தன. அதற்காக எமது கட்சியினுடைய செயலாளர் தொடக்கம் உயர்மட்டத்தினரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இது இவ்வாறிருக்க எமது கட்சிக்கு பட்டியல் ஊடாக கிடைக்கப்பட்ட ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்டோர்.  வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கைக்கு மாற்றமாக அரசியல் வியாபாரிகளோடு பேரம் பேசி அந்த ஆசனங்களை தாரை வார்த்தனர். இதனால் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் பதவியினை பெறும் வாய்ப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இழந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களும் எமது கட்சி ஏறாவூர் நகர சபையின் ஆட்சி, அதிகாரத்தினை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளிலும் ஈடுபட்டு குறித்த உறுப்பினர்களுடனும் பல முறை பேசியும் அது பலனலிக்கவில்லை.

பின்னர் கட்சி செயலாளரினால் எழுத்து மூலமான கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் அதனையும் குறித்த உறுப்பினர்கள் புறக்கனித்து செயற்பட்டனர். மக்களின் ஆணையும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே கட்சி நடவக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெ கட்சியினுடைய ஆதரவாலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டாலும், அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோருகின்றேன். ஏறாவூர் நகர சபை ஆட்சியமைப்பு விடயத்தில் உறுப்பினர்களை விலைபேசி வாங்குவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று சமூக வலயத்தளங்களில் அம்பலமாகிக்கொண்டிருப்பதனை யாவரும் அறிவீர்கள். துரோகிகளை மக்கள் அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைந்துள்ளது.

குறிப்பாக உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் எமது நாட்டின் தேசிய அரசியலில் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் உல்லாசதுறை, நாட்டினுடைய முதலீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் காணப்படுகிறது. இந்த நிலைமைகள் தொடர்ந்தால் நாட்டினது நிலைமை மிக மோசமடையக்கூடும். அதனால் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியாமலும் போகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று மஸ்ஜிதுல் ஹுஸைன் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.அசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஜஃபர், எஸ்.எம்.கமால்தீன், எம்.எம்.சாஜித் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.





 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment