சிறந்ததொரு கல்வி அதிகாரியை இழந்துவிட்டோம்…
உமர்
மௌலானாவின் மரணச் செய்தி கவலையளிக்கிறது: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர்
வலயக்கல்விப் பணிப்பாளர்
உமர் மௌலானா கல்வித்துறைக்கு ஆற்றிய அரும்பணிகளை ஒருபோதும் மறந்துவிட முடியாது எனவும்,
சிறந்ததொரு கல்விமானின் திடீர் மரணச் செய்தி கவலையளிக்கிறது எனவும் கிழக்கு மாகாண முன்னாள்
அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்தச் செய்தியில் மேலும்
குறிப்பிடுகையில்…
மருதமுனையை சேர்ந்த கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அவர்கள் இன்று (10.05.2024) திடீர் சுகவீனமுற்ற நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் காலமானார். அந்நாரின் மரணச் செய்தியினை கேள்வியுற்றதும்
அதிர்ச்சியடைந்தேன்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு ஓய்வு பெற்றுச் செல்லக்கூடியவர்களையும், தற்காலிகமாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்களை நியமிக்கின்ற ஒரு காலம் இருந்தது. அக்காலப்பகுதியில் அந்த வலயத்தின் கல்வி நடவடிக்கைகளும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கல்வியலாளர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறித்த விடயம்
தொடர்பாக நான் அப்போது கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ரோஹித்த போகொல்லாகம அவர்களின்
கவனத்துக்கு கொண்டு சென்றதனையடுத்து ஆளுநரின் விசேட உத்தரவிற்கமைய, உமர் மௌலானா அவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அந்த வலயத்தினை
பொறுப்பேற்ற அவர் மிகவும் துரிதமாக செயற்பட்டு அங்குள்ள பிரதேசங்களை
ஒற்றுமைப்படுத்தி வளங்களை முறையாக பங்கீடு செய்து அவ்வலயத்தின் கல்வியினை மேம்படுத்துவதற்கு
தன்னாலான முழுப்பங்களிப்புக்களையும் செய்தார். அக்காலப்பகுதியில் அவர் சற்று உடல்
நலம் பாதிக்கப்பட்டிருந்த போதும் சற்றேனும் சளைக்காது தனது பணியினை மிகவும் வேகமாக
முன்னெடுத்தார்.
அவரது கடின உழைப்பு
அர்ப்பணிப்புக்களினால் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 400 மேற்பட்டோர்
பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மன நிறைவோடும் பெரும் மகிழ்ச்சியோடுமே
அங்கிருந்து விடைபெற்றார்.
ஒரு சிறந்த கல்வியாளராக
தூரநோக்கு சிந்தனையாளராக வாழ்ந்து தான் கற்ற கல்வியின் ஊடாக சதகதுல் ஜாரியா எனும்
பெரும் பணியை செய்துவிட்டு மறைந்திருக்கின்ற உமர் மௌலானா அவர்களின் நற்கருமங்களை
எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக்கொண்டு அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான
சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும்
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

0 comments:
Post a Comment