பிரதான செய்திகள்

முன்பள்ளிக் கல்வித்துறைக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் முக்கியத்துவம் நமது நாட்டில் வழங்கப்படுவதில்லை

(எம்.ஜே.எம்.சஜீத்)

கல்விக்கு அடித்தளமாக அமையும் முன்பள்ளி கல்வித்துறைக்கு வெளிநாடுகளில் முக்கியத்துவங்கள் வழங்கப்படுகின்றன. துரதிஷ்டவசமாக நமது நாட்டில் தனியார்களும், அரசசார்பற்ற நிறுவனங்களும் முன்பள்ளிகளை நடத்தி வருகின்றன. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள  முன்பள்ளி துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமலும், போதிய நிதி ஒதுக்கப்படாமையும், முன்பள்ளி  கல்வித்துறையினை சிறந்த முறையில் வழி நடத்த முடியாத நிலைமை தோன்றியுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் புதிய தவிசாளராக நியமனம் பெற்ற நாலிந்த கஷ்தூரி குமாரவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யுத்த சூழ்நிலையிலும் இயற்கை அனர்த்த சூழ்நிலையிலும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு கடமை புரிந்து வந்தனர். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக கடமை ஏற்றதும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 1000 ரூபாவாக அதிகரித்து வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை 1000 ரூபாவை அதிகரித்து வழங்கினார்.

மலையக மக்களுக்கான 1000 ரூபா மாதாந்த கொடுப்பனவை பெறுவதற்கு, அரசியல் தலைவர்களினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டும், இன்னும் ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 1,000 ரூபாய் அதிகரித்து வழங்கப்பட்டது. இதுவரை ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக பதவியில் இருந்திருந்தால்  கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இன்னும் அதிகரித்து வழங்கியிருப்பார். ஆனால் சில இனவாதிகளின் செயற்பாடுகளினால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கிழக்கு மாகாணத்திற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின சமூகத்திலும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைய வேண்டும். கடந்த கால கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் முடிந்தளவு சகல சமூகங்களையும் சமனாக மதிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த சம நிலையினை கிழக்கு மாகாண ஆளுனர்கள் மேற்பார்வை செய்து வந்தனர்.

தற்போதய நிலையில் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மூவின சமூகத்தினையும் சமமாக மதிக்கும் செயற்பாடுகளில் இருந்து விலகிச் செல்லும் நிலமை தொடர்கிறது. புதிய ஆளுனருக்கு கிழக்கு மாகாணத்தின் யதார்த்தமான தன்மைகளை விளங்கப்படுத்தாது கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகள் சிலர் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை மலினப்படுத்தக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது.  கிழக்கு மாகாணத்தில் அர்ப்பணிப்போடு கட்டியெழுப்பட்ட மூவின சமூகத்தின் நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது என்பதனை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

புதிதாக முன்பள்ளிக் கல்வி பணியகத்தின் தவிசாளராக, செயலாற்று பணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகம் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைகளுக்கு முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு தீர்வுகளை கண்டுள்ளோம்.

நான் கிழக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் மத்திய மாவட்டமான மட்டக்களப்பில் கிழக்கு மாகாண நீர்பாசன திணைக்களத்தின் மாகாண காரியாலயம், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண காரியாலயம் என்பனவற்றை பல சவால்களுக்கு மத்தியில் திறந்து வைக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அதே போன்றுதான் மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் காரியாலயம் அமைப்பதற்கான காணி இல்லாத நிலை இருந்தது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு முன்பள்ளி கல்வி பணியகத்தினை அமைப்பதற்கு புதிய கச்சேரி அமைந்துள்ள திராய்மடு எனும் இடத்தில் 100 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கி திட்டத்தின் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விபணியகத்தின் மாகாண காரியாலயம் அமைப்பதற்கான 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது விரைவில் உலக வங்கியின் திட்டத்தின் உயர் அதிகாரிகள் காணியினை பார்வையிட்டு கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பிக்க உள்ளனர்.
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களின் சேவை பிரமாணக் குறிப்பு, நியதி திருத்த சட்டம் என்பன திருத்தப்பட்டு இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த, விடயங்களிலும் புதிய தவிசாளர் நடவடிக்கை மேற்கொண்டு கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும். கடந்த ஒரு வருட காலமாக நான் தவிசாளராக கடமையாற்றிய காலத்தில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உயர் அதிகாரிகளுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment