பெரும்பான்மை சமூகத்தின் பேராதரவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகமும் பங்காளர்களாக மாற வேண்டியது காலத்தின் தேவையாகும். அதனை விடுத்து இந்த ஆட்சிக்கு எதிராகவும், பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாகவும் செயற்படுவதன் மூலம் நாம் எதனையும் சாதித்துவிட முடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான ஏ.எல்.அஜ்மல் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை இக்றஃ வட்டாரத்தில் நேற்று (29) இடம்பெற்ற தேசிய காங்கிரசின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகம் இந்த ஆட்சியில் இணைந்துகொள்வதன் ஊடாகவே எமது உரிமை, பாதுகாப்பு, அபிவிருத்தி என்பவற்றை நாம் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். அதனைவிடுத்து சில அரசியல் தலைவர்களின் தேவைகளுக்காகவும், அவர்களின் சுயநலத்திற்காகவும் இந்த ஆட்சிக்கு எதிராக, செயற்படுவதன் மூலம் நாம் எந்தவொரு விமோசனத்தையும் அடைந்துவிட முடியாது.
தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆட்சியானது நீண்டகாலம் பயணிக்கக்கூடிய சூழ்நிலை காணப்படும் போது, முஸ்லிம் சமூகம் கடந்தகாலங்களைப் போன்று தவறிழைக்காது, தமது எதிர்கால நலன்களை
கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். சுயநல அரசியல் நோக்கம் கொண்டவர்கள் முஸ்லிம் சமூகத்தினை மீண்டும் பிழையாக வழிநடாத்தி இந்த ஆட்சிக்கு எதிராக மக்களை திசைதிருப்பலாம். அவர்களின் போலிப்பிரச்சாரங்களுக்கு பின்னால் செல்வோமாகவிருந்தால் எமக்கு பாதகமான விளைவுகளே ஏற்படும்.
இந்த ஆட்சியிலே முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏதாவது ஒரு விடயத்தினைப் பேசுவதாக இருந்தால் அல்லது சாதிப்பதாக இருந்தால் அது தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவினால் மாத்திரமே முடியும். ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமகாலத்தில் இடம்பெறுகின்ற வியடங்களைப் பற்றியும், முஸ்லிம் சமூகத்தைப் பற்றி அக்கரையில்லாமல் தங்களுடைய சுகபோகங்களை அடைந்துகொள்ளும் பொருட்டே செயற்படுகின்றனர், மேலும் அவர்கள் பதவிகளைப் பெறுகின்ற விடயத்தில் மாத்திரமே அக்கரையாகவுள்ளனர்.
குறிப்பாக அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் காலாகாலமாக புரையோடிப்போயுள்ள கட்சி ஒன்றுக்கு வாக்களித்து எதனையும் சாதித்த வரலாறுகள் கிடையாது. இனியும் அந்த கட்சிக்கு வாக்களித்து எதனையும் சாதிக்கவும் முடியாது. எனவே இந்த பிரதேசத்தினுடைய அபிவிருத்தி, இளைஞர்களுடைய வேலைவாய்ப்பு போன்ற விடயத்தில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு சமூகத்தினுடைய எதிர்காலம் இளைஞர்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. ஆகவே எமது சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலயத்தளங்களில் இளைஞர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். சமூக வலயத்தளங்கள் இளைஞர்களின் கைகளிலே உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதனை சமூகத்தின் நலன்கருதி செயற்படுத்த வேண்டும். இந்த பிரந்தியத்திலே உள்ள இளைஞர்கள் தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் அட்டாளைச்சேனை பிரதேசம் அபிவிருத்தி கானும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை இக்றஃ வட்டாரத்தலைவரும், ஆசிரியருமான எம்.ஐ.ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் றம்சான் தஸ்லீம், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஏ.பீ.கபூர், ஐ.இமாமுடீன், அம்பாரை மாவட்ட செயலாளர் ஆசிரியர் எஸ்.ஏ.பாயிஸ், அம்பாரை மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளர் எம்.எப்.நழீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.மனாப், ஜூம்ஆ பள்ளி, இக்றஃ மற்றும் புறத்தோட்ட வட்டாரங்களின் அமைப்பாளர்களான ஏ.சீ.கியாசுடீன், எஸ்.எல்.சமட், யூ.எல்.ஹசீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment