‘பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதனை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் பங்கேற்கும் விசேட சமய வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் நேற்று பிரித் பாராயண நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இப் பிரித் பாராயண நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உட்பட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
சுதந்திர தினத்தையொட்டிய பௌத்த சமய வழிபாட்டு நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி பொல்வத்த, தர்மகீர்த்தியாராம விஹாரையில் நாளை காலை இடம்பெறவுள்ளது. இவ்வழிபாடுகளிலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, நாளை மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இந்து சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. இதில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இஸ்லாமிய சமய நிகழ்வுகள் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளன. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸர் முஸ்தபா, காதர் மஸ்தான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்வுகளும் பகத்தலே பெஸ்ட்ரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
தேச பிதா டி.எஸ் சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதுடன், சுதந்திர தினத்தன்று வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசியகொடியை ஏற்றுமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், வீடுகளில் மரக்கன்றுகளை நாட்டுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரதின நிகழ்வில் சுமார் 2,500 பேர்; கலந்துகொள்ள உள்ளதுடன், 250 விசேட பிரமுகர்களும், சுமார் 1000 பொது மக்களும் கலந்துகொள்ளனர். முப்படை பொலிஸார், மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8,260 பேரைக் கொண்ட மரியாதை ஊர்வலங்களும் நடைபெறவுள்ளன.
சுந்திரதின நிகழ்வுகளுக்கான மேற்கொள்ளப்பட்டுவரும் ஒத்திகை நடவடிக்கைகளுக்ககாக கொழும்பில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 15 அரச, தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒத்திகை நடவடிக்கைகளுக்கான சுதந்திர சதுக்கத்தை அண்டி பிரதேசங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 26ஆம் திகதி முதல் நாளை 03ஆம் திகதிவரை இவ்வாறு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன் நிமித்தம் குறிப்பிட்ட சில வீதிகள் காலை 6.00 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை மூடப்படவுள்ளன. மூடப்படும் வீதிகளுக்குள் வசிக்கும் மக்களுக்கு மாத்திரமே உட்பிரவேசிக்க அனுமதியளிக்கப்படும். இந்த பாதைகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் பொலிஸ் முன்னெடுத்துள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TKN

0 comments:
Post a Comment