ஆளுநர் பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளிலும் பங்கேற்பு
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிரின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 10ஆம் திகதி ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீடுகள், மலசல கூடங்கள் அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வும், அன்றைய தினம் ஏறாவூரில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.சுபையிர் தலைமையில் ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெறவுள்ள, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ.எம்.எஸ்.அபேகுனவர்த்தன, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் வீ.யூசுப், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செலியன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது, 28 பேருக்கு வீடுகள் அமைப்பதற்கான முதல்கட்ட நிதியும், 120 பேருக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்கான நிதியுமாக 3.6 மில்லியன் ரூபாய்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், ஏறாவூர் அல்-அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்விலும், சுமார் 50இலட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஏறாவூர் ஐயங்கேணி ஹிஜ்ரா நகர் வீதியின் அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஆளுநர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வின் போது கல்வி உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளவுள்ளனர்.

0 comments:
Post a Comment