பொத்துவில் அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகம் நடாத்திய என்.எச்.முனாஸ் சம்பியன் கிண்ணக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் றபா விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
பொத்துவில் அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 11பேர் கொண்ட 8ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட என்.எச்.முனாஸ் சம்பியன் கிண்ண மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின், இறுதிப்போட்டி (2) பொத்துவில் களப்புக்கட்டு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேசத்திலிருந்து 34 அணிகள் கலந்துகொண்ட இக்கிரிக்கட் சுற்றுப்போட்டியின்,.இறுதிப் போட்டியில் றபா மற்றும் பிறி லயன்ஸ் ஆகிய விளையாட்டுக்கழக அணிகள் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற றபா அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தனர்.
இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய றபா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்கள் நிறைவில் 5விக்கட்டுக்களை இழந்து 70ஓட்டங்களை பெற்றனர். 71ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பிறி லயன்ஸ் கழக அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்களில் 3விக்கட்டுக்களை இழந்து 67ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவிக்கொண்டனர். அதற்கினங்க, குறித்த போட்டியில் றபா அணியினர் வெற்றிவாகை சூடினர்.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதினை றபா அணியின் அஸ்லம் பெற்றுக்கொண்டார். இக்கிரிக்கட் சுற்றுத்தொடரின் ஆட்ட நாயகன் விருதினை எலைட் அணியின் அமீன் பெற்றுக்கொண்டார்.
அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமான என்.எச்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.கியாஸ் மற்றும் பகுர்தீன், சட்டத்தரணி ஏ.எம்.சாதீர், றபா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எம்.றமீஸ், முகாமையாளர் எம்.ஏ.கபூர், அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
பொத்துவில் பிரதேசத்தில் பொது விளையாட்டு மைதானம் ஒன்றின் அவசியம் கருதி குறித்த கிரிக்கட் சுற்றுப் போட்டியினை அல்-இஸ்ஸத் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment