மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டிருப்பவர்கள் தமது தீர்மானத்தை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் வெளிப்படுத்தாமல் இப்போது கூறித்திரிவது அர்த்தமற்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எத்தகைய சர்வதேச அழுத்தம் வந்தாலும் அதற்கு அஞ்சி தேசிய நலனை ஜனாதிபதி எச்சந்தர்ப்பத்திலும் கைவிடமாட்டாரென்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கேள்வி எழுந்தால் எம்மிடமுள்ள புள்ளி விவரங்களைக் கொண்டு அதற்கு பதிலளிக்க நாம் தயாராக உள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில், சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் என்ற அடிப்படையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (25) காலை தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஏற்கனவே மரண தண்டனை வித்தித்து தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கும் சிறைச்சாலைக்குள்ளிருந்து போதைவஸ்து கடத்தல் நடத்துபவர்களென உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி கையொப்பம் இட முடியுமே தவிர அவரால் மரண தண்டனைக்கு உட்படுபவர்களை தெரிவு செய்ய முடியாது என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இவ்விடயத்தில் ஜனாதிபதி மட்டுமன்றி அரசியல் யாப்புக்கு அமைய நீதி அமைச்சர், சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்குமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள சில அமைப்புக்கள் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்காக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் சர்வதேசத்தின் அழுத்ததங்களுக்கு அஞ்சி எடுத்த தீர்மானத்தை கைவிடப் போவதில்லையென்றும் அதனை சட்டப்படி நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார். உலகில் 54 நாடுகள் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துகின்றன.
இலங்கை உள்ளிட்ட 29 நாடுகளில் அது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. மேலும் 105 நாடுகள் இதனை சட்டத்திலிருந்து நீக்கியுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றன. அமெரிக்காவிலும் பல மாநிலங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றன.
எனவே இதில் நன்மை, தீமை ஆகிய இரு பக்கங்களும் உள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment