பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட ஏழை மக்களுக்குரிய வாழ்வாதார நிதியினை முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நலனுக்காக வேறு பிரதேசங்களுக்கு திருப்பினார்

(எம்.ஜே.எம்.சஜீத்)

கிழக்கு மாகாண சபையின் சமமான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் வாழும் கிராமங்களை அடையாளம் கண்டு அம்மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கடந்த 2014 ஆம் ஆண்டு நிதியில் 150 மில்லியன் நிதியில் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் இறக்காம பிரதேச செயலகப் பிரிவில் இலுக்குச்சேனை, வாங்காமம் கிராமமும், எலக்கம்புர கிராமமும், சம்மாந்துறை வீரமுனை கிராமமும் தெரிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் இலுக்குச்சேனை, வாங்காம பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பதற்கும், பால் குளிரூட்டும் நிலையம் அமைப்பதற்கும் முதற்கட்டமாக 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு 200 பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 37 பயனாளிகளுக்கு மட்டும் கால் நடைகள் வழங்கப்பட்ட நிலையில் இக்கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முன்னாள் கிழக்கு முதலமைச்சர் இடைநிறுத்தி தனது அரசியல் நோக்கங்களுக்காக வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச் சென்றார்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் இலுக்குச்சேனை, வாங்காமம், எலக்கம்புர பிரதேச மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 6 கோடி ரூபா வேறு பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டது என கிழக்கு மாகாண சபையின் 50 இலட்சம் நிதியில் இருந்து கால் நடை வழங்கும் திட்டத்தின் முன் ஏற்பாட்டுக் கூட்டம் வாங்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.சீ. ஆப்தீன் தலைமையில் வாங்காமம் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

கிழக்கு மாகாண முன்னாள்  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் தலைமையில் இயங்கிய மாகாண சபையின் 2 ½ வருட ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் முதலமைச்சரின் தனிப்பட்ட கம்பனி என்ற தொனியில் செயல்படுத்தப்பட்டன. இதற்காக கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள் சிலர் துனை போனார்கள். இதனால் முதலமைச்சரும் சில உயர் அதிகாரிகளும் பெரும் தனிப்பட்ட நன்மைகளைப் பெற்றனர். மாகாணத்தில் வாழ்ந்த மூவின மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக கிழக்கு மாகாண அரசியல் பலத்தினை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டனர்.

உலகத்தில் இல்லாத மாகாண சபையாக கிழக்கு மாகாண சபை இயங்கி வருவதாக  வெளியில் காட்டிக் கொண்டு மாகாண சபை நடவடிக்கைகளை தனிப்பட்ட கம்பனி போன்றும், தனது அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் முதலமைச்சரும் சில அதிகாரிகளும் செயல்பட்டனர். இந்த உண்மையான யதார்த்தங்களை நாங்கள் கிழக்கு மாகாண சபையில்  அன்று தெரிவித்தோம். கிழக்கு மாகாண சபையின் சில அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு முதலீட்டு திட்டம் என்ற போர்வையில் நிதிகளை தவறாக பாவித்ததுடன் சில தனியார் கம்பனிக்கு கிழக்கு மாகாண சபையின் நிதியினை வழங்கி தனிப்பட்ட வியாபார நடவடிக்கைகளுக்கு  கிழக்கு மாகாண சபையின் நிதிகள் பாவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் தவறான நடவடிக்கை தொடர்பாகவும், நிதி ஒதுக்கீடுகளும், செலவுகளும் தொடர்பாகவும் பாராளுமன்றத்திலும், அரசாங்க கணக்கு குழுவும் அறிக்கை செய்யும் அளவுக்கு கிழக்கு மாகாண சபையின்  நிர்வாகம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட ஏழை மக்கள் வாழும் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 கோடி நிதி இடை நிறுத்தப்பட்ட விடயத்தினை  கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமயின்  கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

உயர் அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளை கண்டித்த கிழக்கு ஆளுனர் இந்த இரண்டு கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இடைநிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக  விசாரனை செய்து தனக்கு அறிக்கை செய்யுமாறு கேட்டுக்கொண்டதுடன் முதற்கட்டமாக 1 கோடி நிதியினை 2018 ம் ஆண்டில் ஒதுக்கியுள்ளதுடன் குடுவில் பிரதேச அபிவிருத்திக்காக 15 மில்லியன் கிழக்கு மாகாண நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.

இதற்காக இப்பிரதேச  மக்கள் கிழக்கு ஆளுனர் ரோஹித போகொல்லாகம அவர்களுக்கு  நன்றி தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் கிராம சக்தி திட்டத்தின் கீழ் வரிப்பத்தான்சேனை, மஜீட்புறம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இறக்காம பிரதேச செயலாளர் எம்.எம். நசீர், அம்பாறை மாவட்ட கால் நடை திணைக்கள பணிப்பாளர் னுசு. நளீர், அக்கரைப்பற்று கால் நடை வைத்திய அதிகாரி டாக்டர். சனூஸ், திட்டப்பணிப்பாளர் ஹமீட், கிராம சேவர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment