பிரதான செய்திகள்

வன்னியில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்போர் அம்பாரையில் ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்: கேவலமான அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு மன்னார் முசலி மக்கள் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வை குழப்புவதற்கு அமைச்சர் ஒருவரின் ஆதரவாலர்கள் எடுத்த சதி முயற்சி முறியடிக்கப்பட்டு, வரவேற்பு நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்ததனை யாவரும் அறிவீர்கள்.

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட காதர் மஸ்தான் எம்.பிக்கு வட மாகாணம் பூராகவும் வரவேற்பளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மன்னார் முசலிப் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு பெரும் வரவேற்பு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்த நிகழ்வு முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருந்தன. அதற்கான அனுமதிகளும் சட்டரீதியாக பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதி அமைச்சர் காதர் மஸ்தானின் அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் குறித்த நிகழ்வினை தடுத்து நிறுத்துவதற்கு குறுக்கு வழிகளில் பல முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதி நேரத்தில் குறித்த பாடசாலையின் நுழைவாயில் கதவுகள் அப்பாடசாலையின் சிற்றூழியர்கள் சிலரினால் பூட்டப்பட்டன. இதனால் அந்த நிகழ்வினை பாடசாலையில் நடாத்த முடியாததொரு சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நாசகார செயலினால் முசலிப் பிரதேசத்தில் அன்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியது.

எது எவ்வாறாயினும் முசலிப் பிரதேச மக்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த வரவேற்பு நிகழ்வு அன்றைய தினம் பாடசாலைக்கு முன்பாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் பெருந்திரலானோர் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வினை பாடசாலையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இறுதி நேரத்தில் பாடசாலை நுழைவாயிலுக்கு பூட்டு போடப்பட்டமை உள்ளுர் மட்டத்திலும், அரசியல் உயர் மட்டத்திலும் பரவலாக பேசப்பட்டு வருவதுடன், ஊடகங்களிலும் பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருவதனை அவதானிக்க முடிகிறது.

குறித்த நாசகார வேலையினை வட மாகாண அமைச்சர் ஒருவரே செய்தார் என பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தனக்கெதிரான சகல தடைகளையும் தகர்த்தெறிந்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள் மிக நுனுக்கமாக அவாதானித்து வருகின்றனர்.

அம்பாரையில் வரவேற்பு விழாக்களில் கலந்துகொண்டு சுதந்திரமாக சுற்றித்திரிந்து ஜனநாகயம் பற்றி பேசுவோர் வன்னியில் மக்களுடைய சுதந்திரத்திற்கும், அபிவிருத்திக்கும் தடையாக இருந்துகொண்டு அராஜகம் செய்கின்றனர். இவ்வாறு அரசியல் வேசம் போடுவோர் குறித்து அப்பகுதி மக்கள் உணர்கின்ற சந்தர்ப்பங்கள் இப்போது ஏற்பட்டுள்ளது.

வடபுல அகதிச் சமூகத்தின் அவலத்தினை வைத்து அரசியல் செய்தவர்கள் இன்று அப்பிரதேச அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றனர். பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்ற போது தங்களது அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். அதனாலே பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுடைய வரவேற்பு நிகழ்வுகளுக்கும், அபிவிருத்திக்கும் அவர்கள் தடையாக செயற்படுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் காதர் மஸ்தானுக்கு கிடைத்திருக்கின்ற பெருமதி மிக்க பதவியினை வைத்து வடபுல அகதிச் சமூகத்தின் அவலத்தினை தீர்க்க வேண்டிய இக்காலகட்டத்தில் சுயநல அரசியல் நோக்கம் கொண்டு செயற்படுவது கவலையான விடயமாகும். முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலுள்ள இந்த கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் களையப்பட வேண்டும். எனவே வடபுல மக்கள் முன்வந்து கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக்கொள்வது காலத்தின் தேவையாகும்.

வட மாகாணத்தில் தாங்களும், தங்களது குடும்பமும் மாத்திரமே அரசியல் செய்ய வேண்டும் என்கின்ற குறுகிய சிந்தனை கொண்டவர்களுக்கு விரைவில் வடக்கு முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். சமூகத்தின் நன்மை கருதி சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டிய இக்காலகட்டத்தில் சுயநல அரசியலுக்காக முட்டி மோதிக்கொள்வது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஆபத்தாகும்.

பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் இவ்வாறான கேவலமான செயற்பாடுகளினால் எமது சமூகத்திற்கு பெரும் இழுக்காகும். இந்த நாசகார செயற்பாடு குறித்து ஸ்ரீ.ல.சு கட்சி வட கிழக்கு அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல கையெழுத்து வேட்டையில் ஈடுபடுவதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.

பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுடைய அரசியல் பிரவேசம் தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து என அஞ்சுகின்ற வடக்கு அமைச்சரின் தடைகள் வடக்கு அபிவிருத்திக்கும், வட மாகாண அகதி சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் தடையாக அமைந்து விடக்கூடாது. இதுதொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்படுவது காலத்தின் தேவவையாகும்.

வட மாகாணத்தில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுடைய அரசியல் நடவடிக்கைகளை  நசுக்குவதற்கு முன்னெடுக்குகின்ற செயற்பாடுகள் ஏதோ ஒரு வகையில் அவருடைய அரசியல் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுப்பதற்கு காரணமாகவும் அமையலாம் என்பதனை அவர்கள் உணரத் தவறுகின்றனர். அசிங்கமான அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் முடிவுகட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment