அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவிலுள்ள உள்வீதிகளில் நீண்டகாலமாக தெருமின் விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை திருத்தியமைப்பதற்கு அட்டளைச்சேனை பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த வீதிகளில் வெளிச்சமின்மையால் அவ்வீதியூடாக பிரயாணம் செய்வோர் பல்வேறு விபத்துக்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தற்போது ரமழான் காலப்பகுதி என்பதால் இரவு வேளைகளில் பள்ளிவாசல்களுக்கு செல்லும் பெண்கள் உட்பட வயோதிபர்கள், சிறுவர்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது மேற்படி பிரச்சினைகளை தீர்த்துத்தருவதாக வாக்குறுதியளித்தவர்கள் இந்த விடயத்தில் அசமந்தமாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் குறித்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவு வீதிகளில் பழுதடைந்து காணப்படும் தெருமின் விளக்குகளை திருத்தியமைத்து மக்களின் போக்குவரத்துக்கு உதவுமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காபட் வீதிகளில் அதிக வெளிச்சமுடைய LED மின்விளக்குகளை பொருத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment