பிரதான செய்திகள்

கல்முனை பன்சல வீதி ஒரு வழிப்பாதையாகிறது; வீதியோர வியாபாரங்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை பொதுச் சந்தையை ஊடறுத்து செல்லும் பன்சல வீதியை தினசரி காலை 07.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை ஒரு வழிப்பாதையாக மாத்திரம் பயன்படுத்துவதற்கும் இவ்வீதியின் ஓரங்களில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று கல்முனை மாநகர சபையில் அரச தொழில் முயற்சி, கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் முன்னிலையில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை பொதுச் சந்தை இயங்கும் நேரங்களில் பன்சல வீதியில் ஏற்படுகின்ற வாகன நெரிசல் காரணமாக வர்த்தகர்களும் நுகர்வோரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் வீதியோர வியாபார நடவடிக்கைகளினால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதுடன் சந்தையின் உள்ளக வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு தீர்வாக பன்சல வீதியை சந்தை நடைபெறுகின்ற நேரமான காலை 07.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணி வரை உள்நுழைவதற்காக மட்டுமான ஒரு வழிப்பாதையாக பயன்படுத்துவது எனவும் இவ்வீதியோரங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் வெற்றிலை வியாபாரிகளை அப்பறப்படுத்துவது எனவும் ஏனைய வியாபாரங்களை வீதி வடிகானுக்கு உட்புறமாக நகர்த்துவது எனவும் இணக்கம் காணப்பட்டது.

இந்நடவடிக்கைகளை தினசரி ஒழுங்காக அமுல்படுத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் என இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜெயநதி உறுதியளித்தார்.

இதேவேளை, நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சந்தை கட்டிடக் தொகுதியை புனரமைப்பு செய்வது தொடர்பிலான இறுதி தீர்மானங்களை எடுப்பதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சு அதிகாரிகள், கட்டிட திணைக்கள பணிப்பாளர்கள், கல்முனை சந்தை வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றும் உயர்மட்ட கூட்டமொன்றை ஏற்பாடு செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் சந்தையின் அவசர திருத்தப் பணிகள், வியாபார நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு, தீர்வுகள் எட்டப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரஹ்மத் மன்சூர், எம்.எஸ்.எம்.சத்தார், எம்.எம்.நிசார், சட்டத்தரணி றோஷன் அக்தர், ஏ.எம்.பைரூஸ், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளர்களான றினோஸ் ஹனிபா, நௌபர் ஏ.பாவா, எம்.எம்.தொளபீக், ரீ.எல்.எம்.பாறூக், பொதுச் சந்தை மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இன்ஸாத், சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமால்தீன், பிரதி தலைவர் ஏ.எச்.ரஸ்ஸாக் செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment