பிரதான செய்திகள்

வடபுல முஸ்லிம்களின் அவலம் காதர் மஸ்தான் உழைப்பால் நீங்கும்: முன்னாள் அமைச்சர் சுபையிர்

வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பொருத்தமான பிரதி அமைச்சு பதவி வழங்கி வட மாகாண முஸ்லிம்களை ஜனாதிபதி கௌரவப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் சுபையிர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெயர்ந்து அகதி வாழ்வுக்குள் திணிக்கப்பட்ட முஸ்லிம்களின் துயர் துடைக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு பொருத்தமான அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 வடக்கிலிருந்து 1990 களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வலியினையும், வேதனைகளையும் நன்கு உணர்ந்தவரும், அந்தப் பிரதேச மக்களின் பிரதிநிதியுமான காதர் மஸ்தான் மேற்குறித்த பிரதி அமைச்சின் ஊடாக தனது பொறுப்புக்களை சரிவரச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சு பதவியினை கடந்த காலங்களில் தம்வசம் வைத்திருந்தவர்கள் வட மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்களை சரியாக நிறைவேற்றவில்லை. அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படவுமில்லை. குறிப்பாக அந்த மக்களுடைய அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்த முடியாமல் போனமை கவலையான விடயமாகும்.

வடபுல முஸ்லிம்களின் விடுவிக்கப்படாத காணிகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பவற்றை வைத்து சிலர் அரசியல் செய்யும் நடவடிக்கைகளுக்கு பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் வடபுல மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மிகவும் பெறுமதிமிக்க அமைச்சின் பிரதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியாகும். எனவே அவருடைய பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மேற்படி பிரதி அமைச்சு கிடைத்திருப்பதனால் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரிவர சேவையாற்ற முடியும். சகல இன மக்களுடனும் நெருக்கமாக பழகும் காதர் மஸ்தான் இன, மத பேதமின்றி சேவையாற்றுவார் என்கின்ற நம்பிக்கை சகலருக்கும் உண்டு. அதற்குரிய சகல திறமைகளும் அவரிடமுண்டு. அவருடைய சேவைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன்.

வடக்கிலிருந்து அகதிகளாக்கப்பட்டு இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாத முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதுடன், விடுவிக்கப்படாத முஸ்லிம்களின் காணிகளை மீட்டெடுப்பதற்கான பாரிய பொறுப்பு பிரதியமைச்சர் மஸ்தான் மீது சுமத்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்துக்குள் ஜனாதிபதியின் பூரண ஆதரவுடன் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக வடபுல அகதி சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் சுபையிர் மேலும் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment