அந்-நூர் இளைஞர் கழகத்தின் 28 வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7பேர் கொண்ட 5ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (04) ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் மற்றும் அக்கரைப்பற்று லீ ஸ்டார் கழக அணிகள் மேதிக்கொண்டன.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மாக்ஸ்மன் அணித் தலைவர் அக்கரைப்பற்று லீ ஸ்டார் அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதற்கினங்க முதலில் துடுப்பெடுத்தாடிய லீ ஸ்டார் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்கள் முடிவில் 3விக்கட்டுக்களை இழந்து 63ஓட்டங்களை பெற்றனர்.
64ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5ஓவர்களில் 2விக்கட்டுக்களை இழந்து 59ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர். இப்போட்டியில் மேலதிக 4ஓட்டங்களினால் அக்கரைப்பற்று லீ ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதன்போது வெற்றிபெற்ற லீ ஸ்டார் அணியினருக்கு வெற்றிக் கிண்ணத்துடன், பத்தாயிரம் ரூபா பணப் பரிசும், இரண்டாமிடத்தை பெற்ற மாக்ஸ்மன் அணியினருக்கு கிண்ணத்துடன் ஆறாயிரம் ரூபா பணப் பரிசும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
அந்-நூர் இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ். சியான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் டபள்யூ.ஏ.கங்கா சாதுரிக்கா மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச்.உமர்லெப்பை ஆகியோர் விசேட அதிதிகளாகவும், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன், இளைஞர் சேவை அதிகாரி ஏ.எச்.றியாத் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments:
Post a Comment