மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தின் மாவடிவேம்பில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2020இல் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள் என்றும் புதிய வேலைத்திட்டத்திற்கு அரசியல் கள்வர்களோ, கொலையாளிகளோ தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி...
என்னைப் பார்த்து சிலர் 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற போகின்றீர்களா எனக் கேட்கின்றார்கள். சமூக ஊடகங்களிலெல்லாம் நான் 2020ஆம் ஆண்டு இளைப்பாறப் போவதாக எழுதுகின்றார்கள். நான் 2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற மாட்டேன். எனக்கு செய்வதற்கு இன்னும் பல வேலைகள் இருக்கின்றன.
இந்த நாட்டில் நேர்மையான அரசியல் தலைவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். களவாடாத, மக்களை கொலை செய்யாத எத்தனை பேர் இந்த நாட்டிலிருக்கின்றார்கள்? எங்களுக்கு ஒரு புதிய வேலைத்திட்டம் தான் தேவைப்படுகின்றது. அதற்கு அரசியல் கள்வர்கள் தேவையில்லை. கொலையாளிகளும் இலஞ்சம் வாங்குபவர்களும் ஊழல் வாதிகளும் தேவையில்லை.
2020ல் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். எமது அரசாங்கத்தில் இருக்கின்ற சிலரும் அதனைப் பற்றி பேசுகின்றார்கள். இதற்காக பொருத்தமானவர்களை ஒன்று சேருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் தேசிய ஒற்றுமையை எங்கே உருவாக்க முடியுமோ அந்த இடத்தில் நாம் இருப்போம்.
நாட்டில் வறுமையை ஒழித்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம். நாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக செய்யும் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலர் பரிகசிக்கின்றார்கள்.
இந்த நாட்டில் இனிமேலும் ஒரு யுத்தம் ஏற்படாமலிருப்பதற்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். யுத்தத்தின் மூலமாகவோ துப்பாக்கியின் மூலமாகவோ பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது. மனிதாபிமானத்தின் மூலமாகத்தான் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.
அது தான் முன்னேற்றமடைந்த நாடுகளின் இலட்சணமாக உள்ளது. அதற்காக நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அரசியல் கட்சிகள் நேர்மையாக செயற்பட வேண்டும். அவர்களின் நேர்மையை செயற்பாட்டில் காட்ட வேண்டும்.
அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பலர் மக்களுக்கு பல விடயங்களை எடுத்துக் காட்ட முடியும். எனினும் அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான நல்லெண்ணம் எத்தனை அரசியல் தலைவர்களிடம் உள்ளதென நான் கேட்க விரும்புகின்றேன்.
வடக்கிலோ தெற்கிலோ இனிமேல் இந்த நாட்டில் இளைஞர்கள் துப்பாக்கி ஏந்தாத ஒரு நிலைமையை நாங்கள்தான் உருவாக்க வேண்டும். அரசியல் அதிகாரம் பெறுவதற்காக செயற்படுகின்ற எவரும் இதற்கான செயற் திட்டத்தை முன் வைக்கவில்லை.
இது சம்பந்தமாக ஒரு வேலைத்திட்டத்தினை நாம் முன் வைத்திருக்கின்றோம். அதில் குறைபாடுகள் இருக்கலாம் அதனை நாம் பலப்படுத்த வேண்டும். இந்த நாட்டில் உண்மையான நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் நேர்மையாக செயற்பட வேண்டும். பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்.
மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கின்றோம். என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

0 comments:
Post a Comment