பிரதான செய்திகள்

கொண்டவட்டான் விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்கு தீர்வு: ஹசன் அலிக்கு விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

அம்பாறை கொண்டவட்டான் விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதுடன், சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதியும் வழங்கியுள்ளது.

அம்பாறை, கொண்டவட்டான் பிரதேசத்தில், சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான சுமார் 370 ஏக்கர் விவசாய காணிகளில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்றனர்.

குறித்த காணிகளில் இம்முறை விவசாயிகளினால் சிறுபோக வேளான்மை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் விவசாய நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

கொண்டவட்டான் பள்ளிவாசல் அமைந்துள்ள காணி உட்பட சுமார் 143 ஏக்கர் காணிகள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்றும், அத்திணைக்களத்தின் அனுமதியுடன் மாத்திரமே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.

இதனால் காணி உறுதிப்பத்திரங்களை வைத்துக்கொண்டு பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த கொண்டவட்டான் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

மேற்படி பிரச்சினையினை கொண்டவட்டான் விவசாயிகள் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.ஏ.ஹசன் அலியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

கொண்டவட்டான் விவசாயிகளின் காணிப்பிரச்சினை தொடர்பாக கடந்த மாதம் 25ஆம் திகதி அப்போதைய வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ரவீந்திர சமரவீரவை ஹசன் அலி அவரது அமைச்சில்  சந்தித்தார். கொண்டவட்டான் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அப்போது அவர் அமைச்சரிடம்  தெளிவுபடுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 28ஆம் திகதி அமைச்சர் ரவீந்திர சமரவீர மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர் உட்பட வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளையும் விசாயிகள் சந்திப்பதற்கு ஹசன் அலி ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பு மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்றது.

இதன்போது கொண்டவட்டான் விவசாயிகளுடன் அமைச்சர் உட்படஅதிகாரிகளை ஹசன் அலி சந்தித்து மேற்படி பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். இதன்போது விவசாயிகள் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், தங்களது நியாயங்களையும் குறித்த அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினர்.

இந்த சந்திப்பின் போது குறித்த காணியில் விவசாயம் செய்வதற்கான அனுமதி வழங்குவதெனவும், மறுநாள் 29ஆம் திகதி கொண்டவட்டான் வட்டைக்கு விவசாயிகளை வருகை தருமாறும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளரும், நாவிதன்வெளி, இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான எம்.ஏ.ஹசன் அலிக்கு கொண்டவட்டான் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment