பிரதான செய்திகள்

புதிய வட்டாரத் தேர்தல் முறையினால் மக்கள் பிரதிநிதிகளை பணம் கொடுத்து வாங்கும் நிலைமை உருவாகியுள்ளது: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை

(றியாஸ் ஆதம்)

விகிதாசார தேர்தல் முறையினை மாற்றி புதிய வட்டார முறையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மக்களின் ஆணையினைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களை அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து வாங்கும் நிலைமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் புனரமைப்புக் கூட்டம் (10) அட்டாளைச்சேனை ஒஸ்ரா மண்டபத்தில் தேசிய காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் எம்.எஸ்.எம்.பைறூஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கிய போதிலும் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராகவே வாக்களித்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மக்கள் செல்வாக்கினை இழந்த முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரினை பெற்றுக்கொள்வதற்காக புதிய வட்டார முறை தேர்தலின் பலவீனத்தினை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு அந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை தங்களுடன் இணைத்துக் கொண்ட  போதிலும் தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸினால் நேரடியாக பெறமுடியாத நிலைமை உருவாகியது.

தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையினுடைய ஆட்சி அதிகாரத்தினை தக்க வைத்துக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை குலுக்கள் முறையில் தவிசாளர் பதவினை பெற்றுககொள்ளுமளவிற்கு நிலைமைகள் மாறியுள்ளது. இவ்வாறான பரிதாப நிலைமை முஸ்லிம் காங்கிரஸிற்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முதன் முதலாக ஏற்பட்டுள்ளது.

புதிய வட்டார முறையிலான தேர்தல் திருத்தச் சட்டம், மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம்; ஆகியன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்படும் போது தமது சமூகத்தின் எதிர்ப்பினை வெளிப்படுத்தாமல் இத்திருத்தச் சட்டங்களுக்கு பூரண ஆதரவினை வழங்கி பெரும்பான்மை கட்சிகளை திருப்திப்படுத்திவிட்டு தற்போது நமது முஸ்லிம் தலைமைகள் இப்புதிய தேர்தல் முறையை விமர்சனம் செய்துவருவது மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும்.

நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன்  இணைந்து கைச்சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகளினால் கைச்சின்னத்தில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மேற்குறித்த இரு பிரதேச சபைகளிலும் தேசிய காங்கிரஸிற்கு கிடைக்க வேண்டிய உரித்தான பட்டியல் பிரதிநிதித்துவங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சி வழங்காமல் தங்களது கட்சிக்கு பட்டியல் பிரதிநிதித்துவங்களை வழங்கி தேசிய காங்கிரசை ஏமாற்றியுள்ளது. இது குறித்து தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் அதிர்ப்தி அடைந்த நிலையிலுள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற புதிய  உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தேர்தல் காலங்களில் மக்களால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை கட்சி பேதங்களுக்கு அப்பால் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வட்டார ரீதியில் மக்கள் பிரதிநிதிகள், வட்டாரக் குழுத்தலைவர்கள், அமைப்பாளர்கள், கிளைக்குழுக்கள் இணைந்து தங்களின் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல். அஜ்மல், திருமதி ஜெமிலா ஹமிட், திருமதி சலீம் யாஸ்மின் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment