சங்கங்கள் உருவாக்குவது தாங்கள் அனுபவிப்பதற்கு அல்ல மற்றவர்களுக்கு உதவுவதற்கே. வாங்கும் கரங்களை விட கொடுக்கும் கரங்களே சிறந்தது. நமது கரங்கள் கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும் என சேர்ஃப்-லங்கா (Serf-Lanka) நிறுவனத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் கூறினார்.
தோப்பூர் பிரதேச மீனவ சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சங்கங்கள் உருவாக்கும் போது நாம் பிறருக்கு அல்லது சங்கத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கே இதை உருவாக்குகிறோம் என்ற சிந்தனையிலேயே உருவாக்கப்பட வேண்டும். இதுவரை காலமும் சங்கத்தின் மூலமாக நாங்கள் ஒன்றும் அனுபவிக்கவில்லை என்ற சிந்தனைப்போக்குகள் இல்லாமல் போக வேண்டும்.
நிறுவனங்கள், அரச திணைக்களங்கள், நலன்விரும்பிகள் உதவி செய்வதற்கு சங்கங்களை அணுகும் போது மிகவும் தேவையுடைய வறுமைக்கோட்டில் வாழும் உறுப்பினர்களை மட்டுமே சங்கங்களின் நிருவாகிகள் அடையாளப்படுத்தி கொடுக்க வேண்டும்.
தோப்பூர் பிரதேச மக்களின் பிரதான தொழில்களில் ஒன்று மீன்பிடி. பெருங்கடல், களப்பு கடல், கங்கை, குளம் ஆகியவற்றில் எமது மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். கடந்த கால யுத்தத்தின் போது பலரது வள்ளம், வலை, மீன்பிடி உபகரணங்கள் அழிந்து போனது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட நூல் வலைகளை பாவிக்கும்படியான அரசாங்கத்தின் சட்டமும் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிக்கும் போது வழங்கப்படுகின்ற மிக இறுக்கமான தண்டனையும் மீன்பிடி தொழிலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை ஒரு பொதுவான உண்மையாகும்.
நாட்டின் சட்டத்திற்கு மாற்றமாக செயற்படாமலும் அங்கீகரிக்கப்பட்ட போதிய மீன்பிடி உபகரணங்கள் இல்லாமலும் எமது பிரதேச மீனவர்கள் பலர் தங்களது மீன்பிடி தொழிலை இழந்தனர். மேலும் சேர்ஃப்-லங்கா (Serf-Lanka) நிறுவனத்தை தவிர எந்தவொரு நிறுவனமோ அரசியல்வாதிகளோ மீனவர்களுக்கான போதியளவு உதவிகளையோ பூரணமான தொழில் ஊக்குவிப்பு திட்டங்களையோ இதுவரை செய்யவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
அண்மையில் எமது சேர்ஃப்-லங்கா நிறுவனத்தினால் தோப்பூர் உல்லைக்கழி நீரேரி (Ullackalie Lagoon) மீனவர்களின் நலன்கருதி சுமார் பத்து இலட்சம் பெறுமதியான வள்ளம், அரசு அங்கீகாரம் வழங்கிய வலைகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்ந்த மீனவர்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.
தெரிவு செய்யப்பட்ட 12 மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் வள்ளம், குல்லா, வலை, மீன்பிடி உபகரணங்கள் என சுமார் 75 ஆயிரம் பெறுமதியான பூரணமான உதவிகள் கிடைத்தது இதுவே தோப்பூர் வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் தோப்பூர் பிரதேச மீனவர்களின் நலன்கருதி பல உதவிகளை எதிர்காலத்தில் செய்வதற்கு நாம் முயற்சித்து வருகிறோம். சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறந்த ஒத்துழைப்புகளை வழங்கும் போது எமது சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஏதுவாக அமையும் என்றார்.

0 comments:
Post a Comment