பாலமுனை பிரதான வீதியிலிருந்து சின்னப்பாலமுனை ஊடாக கடற்கரைக்குச் செல்லும் கடற்கரை பிரதான வீதியின் கடற்கரையை அன்டிய பகுதி நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படுவதாகவும், குறித்த வீதியினை புனரமைத்து தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த வீதி சின்னப்பாலமுனை மையப்பகுதியிலிருந்து கடற்கரை வரையான சுமார் 500மீற்றர் நீளமான வீதி குன்றும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பிரயாணம் செய்வோர் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பாலமுனை பிரதான வீதியில் இருந்து சின்னப்பாலமுனை ஊடாக கடற்கரைக்குச் செல்லும் இவ்வீதியானது. சுமார் 1.5 கிலோ மீற்றர் நீளத்தை கொண்டதாகும். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியானது 2014ஆம் ஆண்டு 35மில்லியன் ரூபா நிதியினூடாக காபட் வீதியாக புனர்நிர்மானம் செய்யப்பட்டது.
குறித்த நிதியின் மூலம் வீதியின் 1கிலோ மீற்றர் வரையான பகுதியே காபட் இடப்பட்டது. தற்போது இவ்வீதியின் எஞ்சிய பகுதியானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனை புனரமைப்பதற்கு யாரும் நடவடிக்கை மேற்கொள்ளாமை இப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருந்த போதிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியினை குறித்த திணைக்களம் பல தடவைகள் நிள அளவை செய்தும், மதிப்பீட்டு அறிக்கைகள் தயாரித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பாலமுனை பிரதான வீதியில் இருந்து சின்னப்பாலமுனை ஊடாக கடற்கரைக்குச் செல்லும் இவ்வீதியானது, பாலமுனை பிரதேசத்தில் முக்கியமான வீதிகளில் இதுவும் ஒன்றாகும். மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்ட பாலமுனை பிரதேச மக்கள் தாங்கள் கடற்கரைக்கு செல்வதற்கு இவ்வீதியினையே பயன்படுத்தி வருவது வழக்கமாகும்.
மேலும், ஒலுவில் துறைமுகத்திற்கு வருவோரும், பொழுது போக்கிற்காக கடற்கரைக்கு வருகின்ற மக்களும் இவ்வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர். குறித்த வீதியின் ஒரு பகுதி குன்றும், குழியுமாக காணப்படுவதனால் தினமும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாயினும், சேதமடைந்து காணப்படும் பாலமுனை கடற்கரை வீதியின் கடற்கரையை அன்டிய சிறிய பகுதியினை பொதுமக்களின் போக்குவரத்திற்கு உகந்தவாறு புனர்நிர்மாணம் செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் முயற்சியினாலே பாலமுனை கடற்கரை பிரதான வீதி காபட் இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment