பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID) மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான உதய வீரதுங்கவை கைது செய்வது தொடர்பான பிடியாணையை, சர்வதேச பொலிசாருக்கு அனுப்பும் பொருட்டு, அதனை ஆங்கிலத்தில் வழங்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரான உதயங்க வீரதுங்க, கடந்த 2006 ஆம் ஆண்டில் இலங்கை விமானப் படைக்கு மிக் விமான (MiG-27) கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி துபாய் விமானநிலையத்தில், விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதோடு, அவரது கடவுச்சீட்டு, வசிக்கும் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட விடயங்களைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளதாக, FCID யினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சட்ட உதவி பெற்றுக்கொள்ளும் சட்டமூலத்தின் கீழ் அந்நாட்டு அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த விலாசத்தில் அவர் இல்லை எனவும், அவர் வழங்கிய தொலைபேசி இணைப்பில் இல்லை எனவும் தமக்கு அறிவித்துள்ளதாக FCID யினால் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், உதய வீரதுங்க என்பவர் தப்பி சென்று, ஒளிந்துள்ள சந்தேகநபராக அந்நாட்டு அதிகாரிகளால் பெயரிடப்பட்டுள்ளதாக, இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக FCID யினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.

0 comments:
Post a Comment