முஸ்லிம்கள் கல்வியை இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அதேவேளை புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் முன்னிலை வகிக்கும் நிலை தோன்றியுள்ளது. வருங்கால சந்ததியினருக்காக இதனை மேம்படுத்தவே நாம் செயற்படுகிறோம், இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் சுமூகமான வாழ்க்கையே நமது எதிர்பார்ப்பு என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் கிரிக்கெட் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நசீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நடவடிக்கைகளை நாம் தெளிவாக திட்டமிட்டு செயற்படுத்த எண்ணியுள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மிக சாதூர்யமாக இதற்காக செயற்பட்டு வருகிறார். நாம் அவருக்கு துணையாக செயற்பட்டு வருகிறோம்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் பல்வேறு சோதனைகளையும் தாண்ட வேண்டிய காலகட்டத்தில் இப்போது இருக்கிறோம். அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நம்மை திட்டமிட்டு பலவீனப்படுத்த முனையும் சதிகாரர்களை இனங்கண்டு அவற்றை தாண்ட வேண்டிய பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

0 comments:
Post a Comment