எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தலைமையில் ஏறாவூர் நகர சபைக்கு போட்டியிட உள்ள அணியினர் இன்று (11) மட்டக்களப்பு தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தினர்.
இவர்கள் இன்று இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் சென்று மேற்படி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது ஜனாதிபதியின் முழுமையான அதிகாரங்களோடும், இந்த அரசாங்கத்தின் ஒத்துழைப்போடும் ஏறாவூர் நகரத்திலே புதியதோர் மாற்றத்தைக் கொண்டுவந்து அந்த நகரத்தை கட்டியெழுப்புவதற்கும், கடந்த பல ஆண்டுகள் நடைபெறாத அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும், குறிப்பாக சுத்தமானதும், தூய்மையானதுமான ஒரு நகரத்தை கட்டியெடுப்புவதற்காகவே நாங்கள் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
குறிப்பாக மக்களுடைய நம்பிக்கையை வென்ற உள்ளுராட்சி சபையிலே அங்கத்தவர்களாக இருந்தவர்களையும், மாகாண சபையிலே அமைச்சர்களாக இருந்து மக்களுக்கு சேவையாற்றிய சிறந்த அனுபவம் பெற்றவர்களையும் களமிறக்கியுள்ளோம்.
விசேடமாக ஏறாவூர் மக்களுடைய பூரண ஒத்துழைப்போடு இந்த தேர்தலிலே வெற்றிபெற்று ஏறாவூர் நகர சபையை கைப்பற்றி நேர்மையானதும், வெளிப்படைத்தன்மையுடையதுமான ஒரு சிறந்த நிருவாகத்தை எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு வழங்க முடியும் என்ற நம்பிக்கையிலே களமிறங்கியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.




0 comments:
Post a Comment