- பைஷல் இஸ்மாயில் -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் அங்கு பணியாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், மற்றும் ஊழியர்களின் கடமைக்கும் மேலான அர்ப்பணிப்பும், மனிதாபிமானமே மரணத்தின் வாயலிலிருந்து மீண்டு நான் உயிர்வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது என அக்கரைப்பற்று வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும், வட்டமடு பிரதேச விவசாய அமைப்பின் ஆலோசகருமான எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வட்டமடு விவசாயிகளின் ஹர்த்தால், கடையடைப்பு சம்பவத்தின் போது எதிர்பாராத விதமாக கத்திக்குத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையிலிருந்து சிகிச்சையை முடித்துக்கொண்டு வெளியேறியபோதே வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் புஹாரி இவ்வாறு கூறினார்.
இவர் இது விடயமாக மேலும் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுக்கு இன,மத, பிரதேச பாகுபாடின்றி அளப்பரிய சேவையை ஆற்றிவருகின்றது. கொழும்புக்குச் சென்று வைத்திய சேவையை பெறவேண்டிய ஒரு காலம் இருந்தது. அது இன்று மாற்றப்பட்டு காலடியில் இலவசமாக சிறந்த நவீன வைத்திய சேவையை வழங்கும் வசதியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஏற்படுத்தியுள்ளமை இப்பிரதேச மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
அரசியலுக்காகவும், பிரதேசவாதங்களுக்காகவும், சுயநலன்களுக்காகவும் இவ்வைத்தியசாலையையும், அங்கு பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களையும் சிலர் குறை கூறி வீண் பழி சுமத்துவது வாடிக்கையாக அமைந்துள்ளது. அவ்வாறு கூறுவதால் தமது கடமைக்கும் மேலாக மனிதபிமானப் பணியில் ஈடுபட்டு வரும் வைத்தியர்களையும், வைத்தியசாலை நிர்வாகத்தையும் அது பாதிக்கச் செய்யும். மனிதன் என்ற வகையில் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் மன நிலையில் தளம்பல் நிலையை ஏற்படுத்தும்.
குறிப்பாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹீர், சத்திர சிகிச்சை நிபுணர் ரவீந்திரன் மற்றும் வைத்திய நிபுணர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டப்பட வேண்டியதாகும்.
மேற்படி கத்திக்குத்துக்கு இலாக்காகிய நான் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அன்று காலை நான் சத்திர சிகிச்சைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மறு கனமே சத்திர சிகிச்சை நிபுணர் என்.ரவீந்திரன் மற்றும் ஏனைய வைத்தியர்களினால் மிக விரைவாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இரத்த வெளியேற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட்டேன்.
விரைவானதும், உடனடியானதுமான வைத்திய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படாமல் இன்னும் பத்து நிமிடங்கள் தாமதப்பட்டிருந்தாலும் கூட நான் உயிர் தப்பயிருக்க முடியாத நிலையே அன்று ஏற்பட்டிருக்குமென உணர்வு பூர்வமாக கூறினார்.
இறைவனின் உதவியாலும் இவ்வைத்தியசாலையின் வைத்தியர்களின் பெறுமதியான சேவையினாலும் இன்று உங்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றேன். இந்த வைத்தியசாலை இவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் இங்கு பொலிஸ் நிலையமாகவே இருந்தது.
பொலிஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட போது மக்களின் வைத்திய சேவையைக் கருத்தில் கொண்டு இவ்விடத்தில் வைத்தியசாலை அமைப்பதற்கான பணிகளில் நானும் பிரதான பங்கினை ஆற்றியிருந்தேன்.
இன்று இந்த வைத்தியசாலை நவீன முறையில் தரயமுயர்தப்பட்டு சிறந்த நிபுணத்துவ வைத்தியர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. இதனால் பாணமை தொடக்கம் நிந்தவூர் வரையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான மக்களுக்கு எந்தவித வேறுபாடுகளின்றி சேவையாற்றி வருகின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது என்றார்.

0 comments:
Post a Comment