அரசாங்கம் சைட்டம் மருத்துவக் கல்லூரிப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாகக் கூறி முன்னெடுக்கும் கேலிச் செயற்பாடுகளை உடன் நிறுத்தி விட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சி தெரிவித்துள்ளது.
அப்பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகினால் நவம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சாகும் வரையிலான போராட்டத்தினை முன்னெடுப்பார்கள் எனவும் அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (25) புதன்கிழமை மருதானையில் அமைந்துள்ள சமய மற்றும் சமூக கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் அமைப்பாளர் புபுதுஜயகொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் பேசப்பட்டு வருகின்றன. எனினும் அரசாங்கம் இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவினை கூறாமல் காலம் கடத்தி வருகின்றது.
இதன் காரணமாக பல்கலைக்கழகங்களின் மருத்து பீட மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையால் அவர்களது கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்திரம் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி தீர்வினைத் தருவதாக கூறப்பட்டது.
சைட்டம் செயற்திட்டம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக வேறொரு நிறுவனம் நிறுவப்படும் என்று எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள் ளன. அவ்வாறு வேறு ஒரு நிறுவனம் நிறுவப்பட்டால் அது என்ன என்பது பற்றி அரசாங்கம் எமக்கு அறிவிக்க வேண்டும்.
எனினும் இப்பிரச்சினைக்கு மாற்று நிறுவனம் நிறுவுவது மட்டும் தீர்வாக அமையாது. சைட்டம் கல்லூரியை முற்றாக நீக்க வேண்டும். அத்தோடு புதிதாக மாணவர்களை இணைக்கும் செயற்பாட்டையும் நீக்க வேண்டும். தற்போது அக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை என்ன செய்வது என்பதற்கான தீர்வினையே அரசாங்கம் வழங்க வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையும்.
இப்பிரச்சினைக்கான தீர்வுகள் பலவற்றையும் வைத்திய சங்கங்கள், பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர்கள் சங்கம் போன்றன முன்வைத்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அவை தொடர்பில் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. அரசதரப்பில் இருந்து எவ்விதமான தீர்வு நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
இப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் மருத்துவ பீட பேராசிரியர்களுடன் இதுவரையிலும் கலந்தாலோசிக்கப்படவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை இதுவரையிலும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை அரச மருத்துவ சங்கத்தினர் மட்டும் ஒருமுறை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். ஆயினும் அவர்களின் பங்களிப்பு பயனற்றதாக அமைந்தது.
இப்பிரச்சினைக்கான தீர்வை கடந்த இரு தினங்களுக்குள் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். உயர்கல்வி அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல கடந்த திங்கட்கிழமை தீர்மானத்தை அறிவிப்பதாக குறிப்பிட்டார். ஆயினும் இதுவரை எவ்விதமான தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை. இவர்களின் வாக்குறுதிகள் பொய்யானதாகவே காணப்படுகின்றன.
இப்பிரச்சினைக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்குவதில் தொடர்ந்தும் இழுத் தடிப்புக்களைச் செய்யுமாகவிருந்தால் நவம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத் தினை முன்னெடுப்பார்கள் என்றார்.

0 comments:
Post a Comment