(எஸ்.அஷ்ரப்கான்)
கல்வியியற் கல்லுாரிகளுக்கான நியமனங்களின்போது கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல டிப்ளோமாதாரிகள் பலரை (ஆண், பெண் இரு பாலாரையும்) கிழக்கு மாகாணத்தில் வெற்றிடம் இருக்கத்தக்கதாக வெளி மாவட்டங்களுக்கு நியமித்தமை தொடர்பில் கல்வி அமைச்சருடன் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை உடனடியாக பேசுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பேரவையின் பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மி தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு பணிப்பாளர் கே.எல்.சுபைரின் தலைமையில் கல்முனை அல்தாப் ஹோட்டலில் (ஏ.எப்.சி) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் அங்கு குறிப்பிடும்போது,
ஆசிரியர்களின் விருப்பு வெறுப்புக்களில் நியாயமானவற்றை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவது கல்வி அமைச்சின் தலையாய கடமைப் பொறுப்பாகும். அப்போதுதான் இலங்கையின் கல்வித்துறையானது தனது இலக்கைஅடைய வழியேற்படும். ஆசிரியர் நியமனங்களின்போது வெற்றிடங்கள் உள்ள தனது மாகாணத்தில் அந்த நியமனங்கள் வழங்கப்படாது வெளிமாகாணங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவது பாரிய பிரச்சினையை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகபெண் ஆசிரியைகள் இதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதாக எமக்கு தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூல கிழக்கு மாகாண ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை துரதிஸ்டவசமான விடயமாகும். இது விடயத்தில் நாம் ஒரு பொறுப்பான அமைப்பென்ற வகையில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர்களுடன் இது விடயமாக பேசி பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுப்போம். அதுபோல் மௌலவி ஆசிரியர் நியமன விடயமும் இங்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மிக நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த இம் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறும் நிலையில் அதிலும் கிழக்கு மகாணம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதானது எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினை தொடர்பிலும் உரிய தரப்பினருடன் பேசி ஒரு முடிவினை மேற்கொள்வோம்.
இது விடயத்தில் பாதிக்கப்பட்டோர் உடனடியாக பேரவையின் acymmac@gmail.com மின்னஞ்சல் முகவரியுடனும், செயலாளரின் 0777391691 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
எமது பேரவை இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலமாக மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது. சுமார் 67 வருடகாலமாக நாம் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றோம். அதில் மிக முக்கியமாக காலகட்டம் இன்றைய காலகட்டமாகும். ஏனெனில் எமது பேரவையின் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைமை முதல் முறையாக கிடைத்துள்ளமை பெரும் சாதனையாகும். எனவே இக்காலகட்டத்தில் கிழக்கு வாழ் மக்கள் இதனுாடாக பல்வேறு அபிவிருத்திகளையும் சேவைகளையும் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முனைய வேண்டும் என்பது எமது அவாவாகும்.
அதற்கு கிளைகள் துடிப்புள்ளதாக இயங்க வேண்டும். அதற்காக நாம் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம். அதற்காக அம்பாரை மாவட்ட பேரவை கிளைகள் எமக்கு பூரண ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் எமது அமைப்பின் உச்சக்கட்ட சேவையை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment