நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச சபைகள் உருவாக்கப்படுவதற்கு வித்திட்டது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இதனை ஆதாரபூர்வமாக ஊடகங்களுக்குத் தெரிவிக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். 
டயகம கிழக்கு 3ஆம் பிரிவு தோட்டத்தில் அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை நேற்று (22) பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்...
“1998ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை விரிவாக்க வேண்டும் என அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான், சீ.பீ.ரத்நாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை, ஐக்கிய தேசியக் கட்சியின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ரேணுகா ஹேரத் எதிர்ப்பை தெரிவித்தார்.  
அன்றைய நாள் முதல் தொடர்ந்தும் இழுபறி நிலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இந்தப் பிரதேச சபை விரிவாக்கல் திட்டம் இந்த அரசாங்கத்தில் இ.தொ. காங்கிரஸின் கருத்துகளையும் ஏற்று நிறைவுக்குக் கொண்டு வந்துள்ளது.  
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வரைபடம் கூட இ.தொ.காவால் உருவாக்கப்பட்டது தான். இத்திட்டத்துக்காக சீ.பீ.ரத்நாயக்க ஊடாக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பிலான தகவல்கள் அனைத்தையும் திரட்டித் தரும்படி நான் தற்பொழுது கோரியுள்ளேன். 
சிறு கால அவகாசத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்தத் திட்டம் யாரால் உருவாக்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர்கள் யார் என்பதை அறியப்படுத்துவேன். இன்று நுவரெலியா மாவட்டத்தை ஏழாக்கி விட்டும், பனிரென்டாக்கி விட்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். 
ஆனால் இதன் ஆரம்பம் யாரால் உருவாக்கப்பட்டது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. இதனை வெகுவிரைவில் அம்பலப்படுத்துவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment