மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பில் தன்னிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்ததாக ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், சந்திவெளி, சித்தாண்டி, கொக்குவில் போன்ற பிரதேசங்களுக்கு வாராந்த சந்தை வியாபாரத்திற்காக சென்ற முஸ்லிம் வர்த்தகர்கள் அப்பிரதேச இளைஞர் குழுக்களினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அசாதாரண நிலைமை ஏற்பட்டது.
இந்தவிடயமாக ஜனாதிபதி அவர்கள் இன்று (31) இரவு என்னைத் தொடர்புகொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பில் கேட்டறிந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்ந்து செல்வதால், உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
மேற்படி விடயத்தினை கேட்டறிந்த ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மேலதிக பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதாகவும் தன்னிடம் தெரிவித்தார்.
அத்துடன், ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் யுத்தம் காரணமாக வருடாந்த காணி அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிக்காத விவசாயிகள் தங்களது காணிகளில் விவசாயம் செய்த போது அப்பிரதேச செயலாளரினால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தினையும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
அதுதொடர்பில் சகல ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறும், அதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுத்தருவதாகவும் ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment