கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்குமாறு கோரி கல்முனை மக்கள் இன்று (31) அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர்.
அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பொது நிறுவனங்களின் சம்மேளனம் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைதிப் பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
கல்முனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமான பேரணி, பிரதான வீதியூடாக கல்முனை பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இக்கோரிக்கைள் அடங்கிய மகஜரை மாவட்ட செயலாளர், அமைச்சர்கள். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வகையில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பொது நிறுவனங்களின் சம்மேளனதினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனையை பிரிப்பதாயின் 1987ஆம் ஆண்டு இருந்தவாறு ஏக காலத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளாகப் பிரிக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (31) இரண்டாவது நாளாகவும் கடையடைப்பும், ஹர்தாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அரச சேவைகள், வங்கிகள், பாடசாலைகள் மற்றும் சந்தைகள் என்பன இயங்காமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இதனால் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் அச்சமான நிலை தோன்றியுள்ளதுடன், நாளை முதலாம் திகதியும் சாய்ந்தமருது மக்கள் இதனைத் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர்.




0 comments:
Post a Comment