மட்டக்களப்பு, சந்திவெளி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.
வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள சந்திவெளி வாராந்த சந்தை இன்று (31) கூடியது. இதன்போது வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முஸ்லிம் வியாபாரிகள் வழமை போல் விற்பனைக்கான பொருட்களை வாகனங்களில் அங்கு எடுத்து வந்திருந்த வேளை வியாபாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை என அங்கு கூடிய சிலரால் தெரிவிக்கப்பட்டது . இதனைதையடுத்து அவர்கள் திரும்பி விட்டனர்.
இதுதொடர்பில் வியாபாரிகளை சந்தித்து விடயத்தை கேட்டறிந்த மாகாண முன்னாள் அமைச்சரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபையிர் ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை சந்தித்து இன ஒற்றுமையின் அவசியம் கருதி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இரு சமூகங்களுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்தி இன நல்லுறவை பேனுவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் சுபையிர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் இதன்போது வலியுறுத்தினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரான் வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். செங்கலடி சந்தையிலும் அவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகின்றது.
வாழைச்சேனை சந்தியில் கடந்த வாரம் பஸ் தரிப்பிடமொன்று அமைப்பது தொடர்பாக தமிழ் - முஸ்லிம் தரப்பில் ஒரு சிலருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரொலியாகவே இது போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment