கல்முனை ,மட்டக்களப்பு பிரதானவீதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் மினிரக வாகனமானது ஒன்பது தூண்களையும், கடைச்சுவரையும் உடைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்துள்ளது என களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம் ரத்நாயக்க தெரிவித்தார்.
இச்சம்பவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிகழ்ந்துள்ளது.
கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான மினிரக டாட்டா லொறியானது கல்முனையில் இருந்து புறப்பட்டு கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியூடாக ஏறாவூரை நோக்கி பயணிக்கும் போது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகனமானது வீதியின் அருகாமையில் இருந்த வேலியின் ஒன்பது தூண்களையும், கடையின் சுவரையும் உடைத்து நொறுக்கி விட்டு கடைக்குள் புகுந்துள்ளது.
விபத்தினால் சேதமடைந்துள்ள கடையானது களுவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த தனிநபருக்கு உரித்தான கொமியுனிகேஷனாகும்.
இங்கு போட்டோ பிரதி இயந்திரம், மின்மானி மற்றும் கண்ணாடிகள் உட்பட ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
மேலும் வாகனத்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கொமியுனிகேஷனுக்குள் புகுந்த வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்தில் தரித்து வைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




0 comments:
Post a Comment