கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் போதே அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களுக்கு நாங்கள் சுயாதீனத்தன்மையை வழங்குவோம். ஒருபோதும் மேற்படி நிறுவன முறைமையை நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஈடுபடுத்த மாட்டோம். இந்த நாட்டில் கீர்த்திமிக்கவர்களாக இருந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள் இன்று இந்த இடத்தில் குழுமியிருப்பது மிக்க மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும். நாட்டின் ஏதேனும் அரசியல் நகர்வு இடம்பெறப் போகின்றபோது முதன்முதலில் அது சட்டத்தரணிகளாலேயே உணரப்படுகிறது.
பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வது சாதகமான ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ளும் எதிர்பார்ப்புடனேயேயாகும். மக்களின் அந்த எதிர்பார்ப்புக்களை அந்த ஆளும் குழுக்கள் சிதைத்து விட்டன. மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளரின் நோக்கங்களும் இணையாக பயணிக்கின்ற அரசாங்கமொன்றே இப்போது எங்களுக்குத் தேவை. எமது நாட்டில் மக்களின் எதிர்பார்ப்பும் ஆட்சியாளரின் எதிர்பார்ப்பும் ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்ற அரசாங்கங்களே சதாகாலமும் உருவாகின. இந்த இடத்தில்தான் சிக்கல் நிலவுகின்றது. சட்டத்தின் ஆட்சியை ஆட்சியாளர்களே பொருட்படுத்தாமல் விடுவது எமது நாட்டின் பொருளாதாரமும், சமூக கட்டமைப்பும் சீரழிவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி, ஊழலை நிறுத்திவிடாமல் நாட்டை சீராக்குவது பற்றி நினைத்து பார்க்கக்கூட முடியாது. தற்போது இந்த மோசடி, ஊழல்கள் காரணமாகவே எமது பெரும்பாலான துறைகள் சீர்குலைந்துள்ளன. நான் உங்களுக்கு ஒரு விடயத்தை கூறி வைக்க வேண்டும். உங்களின் தேவையும் எங்களின் தேவையும் ஒன்றேயன்றி இரண்டல்ல. நாட்டை மீளக்கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றாக உழைப்போம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

0 comments:
Post a Comment