தேர்தல்கள் குறித்து அரசமைப்பின் அடிப்படையில் நாங்களே முடிவுகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எல்.ஏ.எம்.ரத்நாயக்க ஏனையவர்கள் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின்தலைவர் அனுரகுமாரதிசநாயக்க செப்டம்பர் 2முதல் ஒக்டோபர் ஐந்தாம் திகதிக்குள் தேர்தல்கள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்காக இலங்கை வருவதற்காக முன்கூட்டியே விமானச்சீட்டுகளை பதிவு செய்து வைத்திருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ ஒக்டோபர் ஐந்தாம் திகதி தேர்தல் வாக்களிப்பு தினம் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்த டெய்லிமிரரின் கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவே இது குறித்து தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜூலை 17ம்திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கான வலு எங்களிற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 17ம் திகதிக்கு உட்பட்ட எந்தவொரு நாளிலும் தேர்தல்கள் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாளிலோ அல்லது வாரநாட்களிலோ தேர்தல்கள் இடம்பெறலாம் அதனை நாங்கள் தீர்மானிக்கலாம் என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க அரசியல்வாதிகளிற்கு இது குறித்து அறிவிப்பதற்கு ஆணையில்லை நாங்கள் பொருத்தமான விதத்தில் தீர்மானிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment