அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் நிலவுவதால் பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் பரவலாக டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்தான நிலைமை தோன்றியுள்ளது. ஆகையால் டெங்கு நுளம்பு பெருக்கம் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினருக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போது இடைவிட்ட மழை பெய்வதாலும் உஷ்ணமான காலநிலை நிலவுவதாலும்
டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு சாதகமான சூழ்நிலை தோற்றுவிக்கப்படக் கூடுமென்பதால் பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல், பாடசாலைகள் உள்ளிட்ட பொது
இடங்களை சுத்தம் செய்து துப்புரவாக வைத்திருக்க வேண்டும்.
நீர் தேங்கியிருக்கும் பொருட்கள், நீர் தேங்கும் இடங்கள் , கடற்கரையோரம் தோணிகள், படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். அத்துடன் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பிரதேசங்களில் அமைந்துள்ள வடிகான்களில் நீண்டகாலமாக கழிவுநீர் தேங்கியுள்ளதாகவும் வடிகான்களை சுத்தம் செய்வது தொடர்பாக கல்முனை மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment