கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் குடுவில் அறபா நகரில் மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்துமாறு பணிப்புரை விடுத்ததற்கமைவாக, இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
பிராந்திய பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து குறித்த மருத்துவ முகாமில்
சேவைகளை வழங்கின.
அதிகஷ்டப் பிரதேசமாக காணப்படும் குடுவில் அறபா நகரில் வசிக்கும்
மக்களுக்கு குறித்த மருத்துவ முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன், அதிகமானோர் கலந்துகொண்டு
சிகிச்சையும் பெற்றுக்கொண்டனர்.
குறித்த மருத்துவ முகாமை நடாத்துவதற்கு பணிப்புரை விடுத்த பணிப்பாளர்
மற்றும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிகிச்சையளித்த வைத்தியர்கள், சுகாதார
திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் அறபா நகர் மக்கள் இதன்போது நன்றி
தெரிவித்தனர்.
அறபா நகர் மக்கள் சுகாதார சேவையினை பெற்றுக்கொள்வதற்கு அதிக தூரம்
பிரயாணம் செய்ய வேண்டியுள்ளதுடன், போக்குவரத்திற்காக மாத்திரம் பெருந்தொகைப்
பணத்தினை செலவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற மருத்துவ முகாமை தொடர்ந்தும் நடாத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
கடந்த மாதம் குடுவில் அறபா நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அங்கு விரைவில்
மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்துவதாகவும் உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம்
குறித்த மருத்துவ முகாம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment