நாடளாவிய ரீதியில் உக்கிரமடைந்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் இன்று (13) உக்கிரமடைந்துள்ள நிலையில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் பாரிய பேரணியும் போராட்டமும் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் எம்.ரி.எம். தாஜுடீனின் தலைமையிலும் ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகம்மது காமிலின் வழிகாட்டலிலும் இடம்பெற்ற குறித்தபோராட்டத்தில் பெரும் அளவிலான ஊழியர்கள் கலந்து கொண்டு ஆக்ரோஷமான கோஷங்களை முன்வைத்தனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதற்காக நீண்டகாலமாக போராடிவரும் நிலையில் அவர்களது போராட்டம் தற்போது தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்:
நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஒரே நிறுவனத்தின் பணியாற்றும் ஒரு தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு, எங்களுக்கு வாக்குறுதி தந்து, அரசு ஏமாற்றி வருகின்றது. எங்களது விடயத்தில் அரசு பாகுபாடாக நடந்துள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பில் பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்விசாரா ஊழியர்களின் பங்கு மிகப் பிரதானமானது.
இன்று தலைநகரில் பல்கலைக்கழக ஊழியர்களின் ஒன்றிணைந்த பாரிய போராட்டம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றும் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இங்கு ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

0 comments:
Post a Comment