பிரதான செய்திகள்

மரங்கள் வேர்களால் கைகுலுக்கிக் கொள்வது போன்று கல்முனையில் ஒற்றுமை மேலோங்க வேண்டும்: பணிப்பாளர் ஏ.எல்.ஏ.அஸீஸ்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

வளவுக்காரர்கள் பகை என்றாலும் அங்குள்ள மரங்கள் வேர்களால் கைகுலுக்கிக் கொள்வது போன்று கல்முனை ஊர்களிடையே ஒற்றுமை மேலோங்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் ஏ.எல்.ஏ.அஸீஸ் வலியுறுத்தியுள்ளார்.

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய 'கல்முனை உள்ளூராட்சி நிருவாகம் 250 வருட வரலாற்றுப் பதிவுகள்' எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் (23) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில் முன்னாள் கல்முனை பட்டின சபைத் தலைவர் ஏ.எம்.முகைதீன் பாவா முன்னிலையில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏ.எல்.ஏ.அஸீஸ் மேலும் தெரிவிக்கையில்;

"கல்முனை நாம் பிறந்த மண். இந்த இடத்தில் நான் ஒரு விடயத்தை சொல்லியாக வேண்டும். சிறிது காலத்திற்கு முன்னர் நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அதாவது இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் தமக்குள் காணப்பட்ட பகைமை காரணமாக தத்தம் வளவில் இருக்கின்ற மரம் கூட பக்கத்து வீட்டுக்காரனின் மரத்துடன் பேசிக்கொள்ளக் கூடாது என்பதற்காக அம்மரங்களை தள்ளித்தள்ளி நாட்டியிருந்தனர்.

எனினும் அந்த இரண்டு மரங்களும், 'நாங்கள் வெளியில் பேசிக்கொள்ளாதது போல்தான் இருப்போம். ஆனால் நிலத்திற்கு கீழால் எமது வேர்களை நீட்டி, கைகுலுக்கிக் கொள்வோம் என்பதில் உறுதியாக இருந்தன. அதுதான் உண்மையான யதார்த்தம். அவ்வாறே எமது ஊர்களும் சமூகங்களும் எந்தவொரு காரணத்திற்காகவும் ஒருபோதும் பகைமையாக இருக்க முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித நேயமே மேலோங்கி நிற்கும். நியாயங்கள் நிச்சயமாக வென்றுதான் ஆகும்.

உலகளாவிய ரீதியிலும் சில பிரச்சினைகள் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதில்லை. பிரச்சினைகளை தீர்க்க முடியா விட்டாலும் அவற்றை சரியாக முகாமைத்துவம் செய்வது முக்கியமாகும். பிரச்சினைகள் கூடக்கூட நல்லிணக்க தன்மையின் தேவை கூடுமே ஒழிய குறைய மாட்டாது.

எந்தவொரு பிரச்சினையின்போதும் பண்பாடு, நாகரீகம் மீறப்படக்கூடாது. பிரச்சினைகள் சுமூகமாக பேசித் தீர்க்கப்பட வேண்டும். பிரச்சினையின்போது ஏற்படுகின்ற சூடு காரணமாக எம்மால் சுதந்திரமாக சிந்திக்க முடியாதிருக்கிறது. அதனால் ஒரு பிரச்சினை இன்னொரு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு பிரச்சினையைக் வைத்தே அடுத்த பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.

பேச்சுவார்த்தைகளும் நல்ல சிந்தனைகளும்தான் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான அடிப்படையாகும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. நல்லிணக்கம், ஒற்றுமை என்பன எங்கும் எதிலும் எப்போதும் பேணப்பட வேண்டும். பண்பாடு என்பது ஏடுகளில் அல்லாமல் மனங்களில் பிரதிபலிக்க வேண்டும்.

சிறிலங்கா ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்கிறோம். அவற்றில் பல கூறுகள் உண்டு. ஒல்லாந்தர், போத்துக்கீசர் காலங்களில் காலி போன்ற இடங்கள் முக்கிய கூறாக இருந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் எமது கிழக்கு மாகாணம்தான் கேந்திரம் முக்கியத்துவமிக்க கூறாக காணப்படுகிறது.

திருமலை துறைமுகம் முக்கிய தளமாக கருதப்படுகின்ற போதிலும் திருமலை தொடக்கம் பொத்துவில் வரையான முழுப்பிராந்தியமும் கேந்திரமுக்கியத்துவமிக்க கூறாகவே நோக்கப்படுகிறது. இவற்றில் வெளிநாடுகள் கண் வைத்துள்ளன. ஆகையினால் கிழக்கு என்ற அடிப்படையில் ஒன்றிணைந்த பலமான சமூகமாக நாம் ஒற்றுமைப்பட வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment