கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் வீடு மற்றும் மலசல கூடங்கள் அமைக்கும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு மற்றும் மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்கான மானிய உதவித் தொகை வழங்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (10) ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மானிய உதவித் தொகையினை வழங்கி வைத்தார்.
குறித்த திட்டத்தின் ஊடாக 28 பேருக்கு வீடு அமைப்பதற்கான முதல் கட்ட நிதியும், 120 பேருக்கு மலசல கூடம் அமைப்பதற்கான முதல் கட்ட நிதியுமாக 3.2 மில்லியன் ரூபாய்கான காசோலைகள் இதன்போது வழங்கப்பட்டது. குறித்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 148பேர் நன்மையடையவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செலியன், பொறியியலாளர் எஸ்.துவாகரன், ஏறாவூர் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மௌலவி எம்.எம்.வாஜித், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.ஹமீம், சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் மௌலவி ஹாரூன், சுதந்திரக் கட்சியின் கோறளைப்பற்று மத்தி அமைப்பாளர் சந்திரபால, மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏறாவூர் மத்திய குழுவினால் பொண்ணாடை போர்த்தி ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய குழுவின் செயலாளர் எம்.எஸ்.கபூர்தீீன் ஆளுநருக்கு பொண்ணாடை போர்த்தி ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.

0 comments:
Post a Comment