பிரதான செய்திகள்

சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்போம், மிருகங்களை பாதுகாப்போம்: அறுகம்பேயில் விசேட வேலைத்திட்டம்

(றியாஸ் ஆதம்)

பொத்துவில், அறுகம்பே,பானம ஆகிய பிரதேசங்களில் தேங்குகின்ற தின்மக்கழிவுகள் முறையாகப் பேனப்படாது, பொத்துவில், பானம பிரதான வீதியின் காட்டுப்பகுதிகளில் கொட்டப்படுவதனால் அப்பகுதிகளில் உள்ள மிருங்களும், பறவைகளும் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை உண்டு இறப்பதுடன், சுற்றாடலும் பாதிக்கப்படுவதாக, அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறைக்கு புகழ்போன அறுகம்பே பிரதேசம் மற்றும் அதனை அன்டிய காட்டுப்பகுதிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், விசேட வேலைத்திட்டமொன்றினை பொத்துவில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்போம், மிருகங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இவ்விசேட வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வுகள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றாடலை மாசுபடுத்தும் செயற்பாடுகளை தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும், இவ்விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது. பொத்துவில் பிரதேச சபை, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இராணுவத்தினர், ரோட்டரி கழகம், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 0767016888 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

பொத்துவில், அறுகம்பே,பானம ஆகிய பிரதேசங்களில் தேங்குகின்ற குப்பைகள் மற்றும் கழிவுகள் பொத்துவில், பானம பிரதான வீதியின் காட்டுப்பகுதிகளில் கொட்டுவதனால், அங்கு, உணவுக்காக வரும் மிருங்களும், பறவைகளும் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை உண்டு இறக்கின்றன. இதில் அதிகமாக காட்டு யானைகளே பாதிக்கப்படுகின்றன. இதனால் மிருகங்களும், பறவைகளும் அப்பகுதியில் அரிதாகும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுறது. எதிர்காலத்தில் உல்லாசப் பயணிகளின் வருகையும் இப்பகுதிகளில் குறைவடையும் வாய்ப்புள்ளது.

அம்­பாறை மாவட்­டத்தின் அறு­கம்பே கடற்­க­ரை­யா­னது, உலக புகழ்­பெற்ற கட­லலை நீர்ச்­ச­றுக்கல் (சேர்பிங்) விளை­யாட்­டுக்கு மிகவும் பிர­சித்தி பெற்ற ஓரு இடமாகும், அறுகம்பேயை அண்­டிய சுற்­றுலாப் பிர­தே­ச­மாக குமண வன­வி­லங்கு சார­ணா­லயம் விளங்குகின்றது. வனங்கள், மலைகள், குளங்கள், களப்­புகள் என இயற்கை வளங்களும் இங்கு நிறைந்து காணப்படுகின்றது. இங்குள்ள மிருகங்களையும், பறவைகளையும் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே அறுகம்பே மற்றும் அதனை அன்டிய பிரதேசங்களை பாதுகாப்பது சகலரதும் கடமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment