பிரதான செய்திகள்

பஸ்ஸில் பயணிப்போருக்கு ஒரு வாய்ப்பு: Online ஆசன பதிவு அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் நீண்டதூரம் பயணஞ்செய்யவேண்டிய பயணிகள், தங்களுடைய பயணத்துக்கான ஆசனங்களை, இணையத்தின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பை, இலங்கை போக்குவரத்துச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று (16) புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற வைபவத்தில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குறித்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டையிலிருந்து ஆரம்பமாகும் இ.போ.ச. நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன பதிவுகளை மேற்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட குறித்த சேவையை sltb.express.lk இணையத்தளம் மற்றும் கையடக்க தொலைபேசி செயலியின் மூலம்  play.google.com/store/apps/details?id=lk.express.sltb பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் 418 (Express 418) எனும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் தரவு பரிமாற்றத்தின் அடிப்படையில் குறித்த ஆசன பதிவுகளை மேற்கொள்ளலாம் எனவும், முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆசன பதிவுகளின் பின்னர், பஸ் நடத்துனரிடம் பயணிகள் தமது e-ticket அல்லது செயலியில் உள்ள ஆசன பதிவை காண்பித்து தங்களது ஆசனத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கென பிரத்தியேகமாக, உரிய சேவைக்கான கட்டணத்திற்கு மேலதிகமாக ஆசன பதிவு கட்டணமாக ரூபா 80 அறவிடப்படும். புதிய செயலி மற்றும் இணையத்தளம் மூலம் இ.போ.ச. நெடுந்தூர பஸ் சேவைகளுக்கான ஆசன பதிவுகளை, வரிசையில் நிற்கும் சிரமங்களின்றி, வீட்டில் அல்லது அலுவலகத்தில் அல்லது எந்தவொரு இடத்திலிருந்தவாறும், பயணிகள் எவ்வித சிரமங்களும் இன்றி மேற்கொள்ளலாம் என, அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பயணிகளின் நேரத்தை மீதப்படுத்தும் நோக்கில் குறித்த சேவைகளை, இ.போ.ச. அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் பயணச்சீட்டு வழங்கும் பகுதிகளுக்கான போக்குவரத்து சபையின் நிர்வாக செலவுகளை குறைக்கவும் இது உதவும் என அவர் சுட்டிக்காட்டினார். இதன் இரண்டாம் கட்டமாக, இவ்வசதியை ஏனைய பிரதான நகரங்களிலிருந்து சேவைகளை வழங்கும் நெடுந்தூர சேவைகள் தொடர்பிலும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த வசதியை, தனியார் பஸ் சேவை துறையும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாக, குறித்த தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யலாம் என அமைச்சர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபை தற்போது இலாபமீட்டும் நிறுவனமாக மாறியுள்ளதோடு, பயணச்சீட்டு மோசடியில் ஈடுபடும் நடத்துனர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதோடு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தவிர, இவ்வாண்டின் இறுதிக்குள், அனைத்து இ.போ.ச. பஸ்களிலும் அதன் அமைவிடத்தை காண்பிக்கும் GPS தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒழுக்கமான பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கொண்ட சேவையை இ.போ.ச. எதிர்பார்க்கின்றதோடு, இன்று இ.போ.ச. பஸ்களின் விபத்துகள் மிக மிக குறைவடைந்துள்ளதால், பெரும்பாலான பயணிகள் இ.போ.ச. பஸ்களில் பயணிக்கவே விரும்புகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment