44வது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கட் போட்டியில் கிழக்கு மாகாணம் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளது. மேற்படி விளையாட்டு விழாவின் தேசிய மட்ட கிரிக்கட் போட்டிகள் எம்பிலிபிட்டிய பொது மைதானத்தில் இடம்பெற்றது.
அணிக்கு 11பேர் 15ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டியில் மூன்றாவதுஇடத்தினை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று (16) நடைபெற்றது. இதன்போது சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண அணிகள் மோதிக்கொண்டது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கிழக்கு மாகாண அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தனர். அதற்கினங்க, முதலில் துடுப்பெடுத்தாடிய சப்ரகமுவ மாகாண அணியினர் 13.1ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 43ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர். இதன்போது கிழக்கு மாகாண அணி சார்பாக 3ஓவர்கள் பந்து வீசிய அன்சாரி 7ஓட்டங்களை கொடுத்து 4விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
44ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணியினர் 6.1ஓவர்களில் 3விக்கட்டுக்களை இழந்து 44ஓட்டங்களை பெற்று வெற்றியினை தனதாக்கிக்கொண்டனர். அந்த அணிக்காக விளையாடிய நிக்ஸி 20ஓட்டங்களையும், அக்ரம் ஆட்டமிழக்காது 14ஓட்டங்களையும் பெற்றனர்.
குறித்த போட்டியில் கிழக்கு மாகாணம் மூன்றாவது இடத்தினை பெறுவதற்கு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்திய சகல வீரர்களுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறது.
தேசிய மட்ட கிரிக்கட் போட்டியில் மேல்மாகாணம் முதலாமிடத்தினையும், வடமேல் மாகாணம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment