பிரதான செய்திகள்

பொத்துவில் அறுகம்பேயில் 'Half Marathon' ஓட்டப்போட்டி: உள்நாட்டு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு

(றியாஸ் ஆதம்)

உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே 'Half Marathon' போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் பொத்துவில் ADF அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் 3வது தடவையாகவும் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (11) அறுகம்பே புளு வேவ் ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், பிரதேச சபை உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம் மற்றும் ஒன்றியத்தின் செயலாளரும், வைத்தியருமான இஸட்.எம்.ஹாஜித் ஆகியோர் கலந்துகொண்டு விளக்களமளித்தனர்.

கல்விக்காக ஓடுவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள அறுகம்பே 'Half Marathon' - 2018 மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் உள்நாட்டு வெளிநாட்டு மரதன் ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். 500பேர் கலந்துகொள்ளும் சர்வதேச தரத்திலான இம்மரதன் ஓட்டப்போட்டியில் ஆண்,பெண் என இரு பாலாரும் கலந்துகொள்ள முடியும். இதுவரை 5 நாடுகளிலிருந்து பல போட்டியாளர்கள் குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

பிரதேச மட்டத்திலான ஓட்ட வீரர்களையும் இணைத்துக்கொள்ளும் வகையில் இம்மரதன் ஓட்டப் போட்டியானது நான்கு பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. 21.1Km, அரை மரதன், 10Km மரதன், 5Km மரதன் எனும் அடிப்படையில் இப்போட்டி இடம்பெறவுள்ளது. 5Km மரதன் ஓட்டப்போட்டி இரு பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மாத்திரம் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய இரு பிரிவுகளிலும் 17வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

21.1Km, அரை மரதன் போட்டியில் கலந்துகொள்ளும் சகல வீரர்களும் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவரினால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றுதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 10Km, 5Km மரதன் போட்டியில் பங்குபற்றுபவர்கள் மருத்துவச் சான்றுதழ்கள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமில்லை.

இப்போட்டியானது அல்-அக்ஸா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பித்து பசரிச்சேனை ஊடாக சென்று சவாலை ஊடாக மீண்டும் பிரதான வீதியை அடைந்து ஊரணி, சிரியா வளைவு வரை சென்று அறுகம்பே பாலத்தில் நிறைவுபெறும். இதன்போது 5Km தூரமானது அறுகம்பே பாலத்தடியில் நிறைவுபெறும், 10Km குஞ்சான் ஓடை பாலத்தில் நிறைவுபெறும். அரை மரதன் 21.1Km தூரமானது மீண்டும் சிரியாவில் இருந்து திரும்பி அறுகம்பே பாலத்தில் நிறைவுபெறும்.

இந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், பதக்கம் மற்றும் சான்றுதழ்களும் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் 21.1Km, அரை மரதன் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தினை பெறும் வீரருக்கு சான்றுதழ் மற்றும் பதக்கத்துடன் 15000 ரூபா பணப்பரிசும், இரண்டாமிடத்தினை பெறும் வீரருக்கு சான்றுதழ் மற்றும் பதக்கத்துடன் 10000 ரூபா பணப்பரிசும், மூன்றாமிடத்தினை பெறும் வீரருக்கு சான்றுதழ் மற்றும் பதக்கத்துடன் 5000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று  10Km, 5Km மரதன் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தினை பெறும் வீரர்களுக்கு, சான்றுதழ் மற்றும் பதக்கத்துடன் 5000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. அத்துடன் இம்மரதன் போட்டியில் கலந்துகொண்டு ஓட்டத்தினை பூரணமாக நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றுதழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment