மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் மலர்தூவி ஆளுநருக்கு வரவேற்பு
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபையின் உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம நாளை (26) ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் கிழக்கு மாகாண ஆளுநர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள கௌரவிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
பாடசாலை அதிபர் அல்-ஹாஜ் எம்.எம்.எம்.முகைடீன் தலைமையில் நாளை (26) காலை 10மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
குறித்த பரிசளிப்பு நிகழ்வில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேற்படி பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் தளபாட பற்றாக்குறை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதனையடுத்து, குறித்த தளபாடப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தளபாடக்கொள்வனவிற்காக ஆளுநரினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களையும் கிழக்கு மாகாண ஆளுநர் இந்நிகழ்வின் போது கையளிக்கவுள்ளார். அத்துடன் அப்பாடைசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாகவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துதல் உட்பட பல்வேறு அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் சம்பந்தமாகவும் அன்றைய தினம் ஆளுநரிடம் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் பிரதேசத்திற்கு வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயத்தினை மேற்கொள்ளும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு மாக்கான் மாக்கார் வித்தியாலய மாணவர்களினால் மலர்தூவி வரவேற்பளிக்கப்படவுள்ளது.

0 comments:
Post a Comment