பிரதான செய்திகள்

மாமனிதர் மன்சூர் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம்


ஆக்கம் - எம்.ஸி. ஆதம்பாவா (பி.ஏ.) ஓய்வுபெற்ற உதவிக் கல்வி அதிகாரி (சட்டத்தரணி)

- தொகுப்பு - எஸ்.அஷ்ரப்கான் -

.1970 களில் கல்முனை தொகுதிக்கு ஐ.தே.கட்சியின் அபேட்சகராக, பாராளுமன்ற உறுப்பினராக, மேலும் மாவட்ட  அமைச்சராக 'கெபினற், அந்தஸ்து அமைச்சராக சுமார் கால் நூற்றாண்டு காலம் கல்முனை தொகுதியையும், இலங்கை பாராளுமன்றத்தையும் அரசியலையும் தன் அறநெறிகளாலும் தூய்மையான சேவைகளாலும் அளப்பெரிய அர்ப்பணிப்புகளாலும் தியாகத்தாலும்
தாட்சண்ணியத்தாலும் அலங்கரித்த மாமனிதர் கலாநிதி மர்ஹூம் யு.சு மன்சூர் (அட்வகேற்) அவர்களுக்கும் இன்று (25) தினத்திற்கும் என்ன தொடர்பு? ஆம் அக்கறைபடியாக் கரம் அரசியல் மேதை மாமனிதர் ஏ.ஆர்.எம்.மன்சூர் மறைந்து ஒருவருட பூர்த்தி இன்று!

கல்முனைக்கு ஐ.தே.கட்சி அபேட்சகர், இது யாருடைய தெரிவு? காலஞ்சென்ற கணவான் முன்னாள்பிரதமர் கௌரவ டட்லி சேனநாயக்க அவர்களினது, அத்தேர்தலில் 955 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற போதிலும் தேர்தல் வழக்கு தொடரவுமில்லை, எவரையும் பகைக்கவுமில்லை, மக்கள் சேவை தொடர்ந்தே சென்றது. ஈற்றில் பாராளுமன்ற உறுப்பினரானார்.

ஆனதுதான் தாமதம், எத்தனை ஆயிரம் பேர்களுக்கு நேரடியான தொழில் மறைமுகமாக மற்றும் ஆயிரக்கணக்கில் தனது தொகுதிக்கு வெளியிலும் கூட, எத்தனை கோட்டாக்கள் எத்தனை மீன்பிடி படகுகள் எத்தனை பொது நூலகங்கள் எத்தனை மண்டபங்கள் எத்தனை நிறுவனங்கள் இந்த தொடரில் எத்தனை பாடசாலைகள்? எத்தனை  மார்க்கஸ்தலங்கள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி, ஆயிரங்கால் மண்டபம்,

கல்முனைக்கு 'பைப் லைன்' தண்ணீர், மாடிச் சந்தை, கடற்கரைப்பள்ளி கடலோரத்துக்கு
கல் பாறைகள், கிட்டங்கியில் தண்ணீர் இறைக்க இராட்சத இயந்திரம், குளத்தைப் பிளந்து ஹிஜ்றா வீதி, இப்படி இன்னும் எத்தனையோ அவை வேறு.

வழங்கிய அத்தனை ஆயிரம் தொழில்களுக்கும் ஒரு சதம் கூட ஒரு பொருள் கூட ஒருவரிடமும் வாங்கவில்லை. தேவைக்கும், தகைமைக்கும் ஏற்ப அத்தனை தொழில்களும், புரோக்கரும் இல்லை சிபாரிசும் இல்லை, தொகுதியிலுள்ள சகல ஊர்களுக்கும் சகல சமூகங்களுக்கும் சம வாய்ப்பு, காசுக்கு மட்டும்தான் தொழில் தன் இனத்துக்கு மட்டும்தான் தொழில், தன் ஊருக்கு மட்டும்தான் தொழில் போன்ற குறுகிய கொள்கைகளும் கோசங்களும் மறைந்து மடிந்தன. இலஞ்சம் பெறுபவர்களுக்கும் ஊழல் புரிபவர்களுக்கும்,

கடமையில் கண்ணியம் ; காக்காதோருக்கும் நடுக்கமும்;  காய்ச்சலும். கல்வியா? கமத்தொழிலா? கடற்றொழிலா? வர்த்தகமா? வைத்தியமா? வீடா? வேறேதுமா? அத்தனை துறையிலும் உச்சப் பயன் கல்முனையில் மன்சூரின் பதவிக் காலத்தில்.

கற்றறிந்த மகான்களும், மாமேதைகளும் நிறைந்த யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மன்சூர் மாவட்ட அமைச்சர் யார் இந்த நியமனத்தை வழங்கியது? துசு நல்லாட்சியை நடைமுறைப்படுத்திக்காட்டிய உலகத்துக்கு உதாரண புருஷராக இருந்தார்.

அரசியல் ஞானி பேராதனைப்  பல்கலைக்கழகத்தில் முதலாவது சுதேச கணிதப் பேராசிரியர் இரண்டாம் எலிசெபத் மகா இராணியாரின் கணித ஆசிரியர் அடங்கா தமிழர் சி.சுந்தரலிங்கம்  ஐயா அவர்கள் இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் வகித்த வர்த்தக வாணிப அமைச்சர் பதவி இந்த மன்சூருக்கு யார் வழங்கிய பதவி? மக்களின் மகத்தான தலைவர் மனிதருள் மாணிக்கம் மறைந்த பிரேமதாஸ அவர்களால் நிந்தவூரில் பொது நூலகத்தைக் கட்டிக் கொடுத்த மன்சூர்,

அதனைத் திறந்து வைக்க மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரம சிங்ஹ அவர்களை அழைத்து வந்து இலட்சக்கணக்கான மக்கள் சமுத்திரத்தில் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களைப் பார்த்து 'நீங்கள் தான் இந்நாட்டை ஆளக்கூடிய அனைத்து  இயல்புகளையும் கொண்டவர், எனவே நீங்கள் தான் இந்நாட்டின் எதிர்கால ஜனாதிபதி, அதற்கான பயணத்தை இன்றே இப்பொழுதே இப்புனித பள்ளிவாசல் மைதானத்தில் இருந்தே ஆரம்பிப்போம்' என சாஸ்திரம் சொல்லித் தொடங்கி வைத்த ஜனாதிபதி பதவிக்கான பந்தயம் இன்னும் முடிந்தபாடில்லை. முன்சூரின் ஆரூடம் பொய்த்ததை நான் கண்டதும்

இல்லை. இன்ஷா அல்லாஹ் இந்த நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போறவர் யார்? ஏன்று பொறுத்திருந்து பார்ப்போம்.

1989 பொதுத்தேர்தலில் மன்சூர் போட்டியிடவில்லை நியமன எம்.பி.அதே போன்று 1994 பொதுத் தேர்தலிலும் போட்டியிடாது நியமன எம்.பி.யாகவே வரும்படி கொளரவ அனுர பண்டாரநாயக போன்றவர்கள் எத்தனை தடவைகள் கெஞ்சி கெஞ்சிக் கேட்டார்கள், ஜனநாயகத்தில் கொண்ட பற்றால் இரண்டாந் தடவையும் நியமன எம்.பி.யாக இருக்க விருப்பமில்லை. மக்களின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தால் இலகுவாக கிடைக்கவிருந்த எம்.பி. பதவியைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை இந்த மன்சூர்!

மன்சூருடைய அன்றாட வாழ்க்கை இறை பக்தி மிக்கதாகவும், கட்டொழுங்கு தவறாததாகவும், பக்கசார்பற்றதாகவும் இருந்து வந்ததை நாம் அறிவோம். சந்தர்ப்பவாதமோ, இனரீதியான சிந்தனையோ அரசியல் பழிவாங்கலோ அவரிடம் அறவே இருக்கவில்லை. 'பிளவுபடாத இலங்கையில் சகல சமூகங்களுக்கும் சம அந்தஸ்து' என்பதே மன்சூரின் அரசியல் சித்தார்ந்தமாக இருந்தது.

1977 பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனையில் அதன் சொந்த அபேட்சகரை நிறுத்தி இருந்த போதிலும், தமிழ் மக்கள் மன்சூருக்கே தங்கள் வாக்குகளை போட்டுக்குவித்தது ஏன் கொழும்பில் இருந்த மன்சூர் 1978 சூறாவளியைத் தொடர்ந்து, அம்பாறை வந்து கல்முனைக்கு கால்நடையாக வந்தது எதனால்? கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களுக்கு கூட்ட மண்டபங்கள் கட்டி, முத்திரை வெளியிட்டது சேர் ராசிக் பரீட் அவர்களுக்கு கூட்ட மண்டபம் கட்டியது கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களை

கல்முனைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் நீண்ட காலம் தனது விருந்தினராக  வைத்திருந்ததெல்லாம் எதற்காக? தென்கிழக்கு பல்கலைக்கழகம் மன்சூருக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் சூட்டி மகிழக் காரணம் என்ன? எல்லாவற்றுக்கும் காரணம் மன்சூரின் ஆளுமைதான். தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கல்முனை தெற்கு யு.ஆ.ர் ஆதார வைத்தியசாலை என்பவற்றுக்கும் ஸ்தாபகர் இந்த மன்சூரேதான் என்பதற்கு நான் கண்கண்டசாட்சி.

பொத்துவிலும் புகையிரதம் போக வேண்டும் கல்முனை வயல் நிலங்களில் இரண்டு  போகமும்வேளாண்மை செய்ய வேண்டும், கல்முனையில் மீன்பிடித்துறைமுகம், மாவடிப்பள்ளியில் பீங்கான் தொழிற்சாலை, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசால் வளவுக்குள் பிரமாண்டமான கலாச்சார மண்டபம் என்பன மன்சூர் இறக்கும் வரை இருந்து வந்த 'ஈறல்கள்' ஆகும்.

தமக்கென தனியாக இருந்த சாய்ந் தமருது உள்ளுராட்சி சபையை கல்முனை உள்ளுராட்சி சபையுடன் இணைத்தது இந்த மன்சூர்தான் என்று பலர் கதைக்கக் கேட்டிருக்கின்றேன். அது அப்படியில்லை. மாண்புமிகு ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் இலங்கை எங்கேனும் 'மினிக்' கச்சேரிகளை உருவாக்கும் ஒரு புதுக் கொள்கையுடன் தனது பதவிக்காலத்தை ஆரம்பித்தார்.

அக்கொள்கையின்படி அயலில் இருந்த சில உள்ளுராட்சி சபைகளை இணைத்து ஒரு பெரிய உள்ளுராட்சி சபை உருவாக்கப்பட்டது. அந்த பெரிய உள்ளூராட்சி சபைதான் மினிக் கச்சேரியாக மிளிரும். இக்கொள்கையின்படி சம்மாந்துறை உள்ளுராட்சி சபையும், இறக்காமம் உள்ளுராட்சிசபையும் ஒன்றாக இணைக்கப்பட்டன.

நிந்தவூரும் காரைதீவும் ஒன்று. அதன்படி பிரேமதாஸ அவர்களின் கொள்கைப்படி 'மினிக் கச்சேரி' உருவாக்கப்படுவதற்காக ஒன்றாக இணைக்கப்பட்டவைதான் கரைவாகு தெற்கு, கல்முனை பட்டின சபை, கரைவாகு வடக்கு, கரைவாகு மேற்கு உள்ளுராட்சி சபைகள் ஆகும். இந்தக் கதையை அம்பாறை மாவட்டத்தில் கரையோர மாவட்டம் கேட்டு மன்சூருடன் போன எங்களுக்கு கௌரவ பிரேமதாஸ அவர்களே கூறியதுடன் மேலும் உங்களுக்கு 'மினிக் கச்சேரி' என்ற பெயரில் ஏழு மாவட்டங்களைத்தர இருக்கின்றேன, அதில் ஒன்றுதான் 'கல்முனை மினிக்கச்சேரி' என்றும் கூறினார்.

எனவே, சாய்ந்தமருதுவும் கல்முனையும் இணைந்தது பிரேமதாஸ அவர்களினாலாகும். மன்சூரின் அரசியல் தலைமைத்துவம் போன்று ஒரு தலைமைத்துவம். மீண்டும் கல்முனையில் தோன்றும் காலம் அக்காலம்தான் எக்காலம் கல்முனை கிழக்கின் முகவெற்றிலை!

அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment