அட்டாளைச்சேனை பிரதேச சபையில் முஸ்லிம் மற்றும் சகோதர இன சிங்கள உறுப்பினர்கள், மக்கள் பிராதிநிதிகளாக பிரதிநிதித்துவப் படுத்துவதால் சபை அமர்வுகளில் உறுப்பினர்களினால் பேசப்படும் விடயங்கள் மொழிப் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் திருமதி ஜெமீலா ஹமீட்டினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு இன்று (19) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மேற்படி பிரேரனையை முன்வைத்து அவர் உரையாற்றினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த சபையில் சக உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு தற்போது பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கான பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமனம் பெற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரான லொயிட்ஸ் யூ.கே. ஆதம்லெவ்வைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், அறபா வித்தியாலய வீதியில் அமைந்துள்ள பாலத்தில் புதிய தெருவிளக்கு இணைப்பினை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தேன். அதனை கருத்திற்கொண்டு தவிசாளரின் உத்தரவிற்கிணங்க குறித்த தெரு மின்விளக்குகள் சீர்செய்யப்பட்டுள்ளமைக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காபர்ட் வீதிகள், உள்ளக வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துதல் கட்டாயமாகவுள்ளது. எனவே குறித்த நடவடிக்கையினை அவசரமாக ஏற்படுத்தி விபத்துக்களை தடுப்பது பொருத்தமானதாகும். இவ்விடயம் தொடர்பில் அறபா வித்தியாலய அதிபர் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எழுத்துமூலம் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், சபை அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வுலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஊடக்துறை இன்று மக்கள் மயப்பட்டுள்ளது. அதற்கு அர்பணிப்புச் செய்கின்றவர்களாக ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர்.
எனவே எமது செயற்பாடுகளும் மக்களுக்கு சென்றடைதல் அவசியம். அதனால் பிரதேச சபை நடவடிக்கைகள், மக்களுக்கு எந்தளவு முக்கியத்துவமானது என்பதனை வெளிக்கொணர்ந்து மக்கள் மயப்படுத்தும் செயற்பாடு அவசியமானது எனவே அதனை கருத்திற்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுக்குமாறு கௌரவமான இச்சபையில் கேட்டுக்கொள்கின்றேன்.
எமது பிரதேச சபையில் சகோதர மொழி பேசும் (சிங்கள) உறுப்பினர்கள் பதவிவகிக்கின்றனர். இச்சபையில் உரையாற்றும் சகோதர மொழியை தமிழிலும், தமிழில் பேசுவதனை சகோதர (சிங்கள) மொழியிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது அவசியமாகும். அவ்வாறு வழங்கப்பாடாமலிருப்பது சிறப்புரிமையினை மீறும் செயலாகவே கருதுகின்றேன். எனவே அதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
என்னால் இச்சபைக்கு பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டும் தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் மாத்திரமே சிறப்புற இடம்பெறுகின்றது. ஏனைய அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளது கவலையளிக்கின்றது. பிரதேச சபை என்பது தெரு மின்விளக்குகள் பொருத்தும் இடமாக மாற்றம் பெற்றிருப்பதாக மக்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன் இங்குள்ள சபை உறுப்பினர்களில் அனேகமானோர் சோர்வடைந்துள்ளதனையும் அறியமுடிகின்றது. எனவே இச்சபையை தவிசாளராகிய நீங்கள் மக்கள் பாராட்டுக்கூடிய வகையில் வழிநடாத்த வேண்டும் என்றார்.

0 comments:
Post a Comment