மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்கத்துக்கு நீர் பாய்ச்சும் பணியை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் பேசும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்...
இந்த மொரகஹகந்த திட்டம் எனது நீண்டகாலக் கனவாகும். இதனை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது. இதனை அன்று நான் ஆரம்பித்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் அதனைத் தடுப்பதற்கான வழிகளையே கையாண்டனர். என்னை செயற்படவிடாமல் தடுத்தவர்கள் துரோகம் செய்தது எனக்கல்ல. இந்த நாட்டு மக்களுக்கேயாகும். தேசத்தின் பொருளாதாரத்தை படுகுழிக்குள் தள்ளிவிட்டனர். அத்தகையவர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
அதேபோன்று இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும்போது அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்லது வேறு யாருமோ ஊழல் மோசடிகளிலீடுபட்டால், அவர்கள் விடயத்தில் நான் கடுமையாக நடந்துகொள்வேன். தயவு காட்டப்போவதில்லை. இதில் ஊழல் மோசடிகள் இடம்பெறுமானால் அதனைக் கண்டறியும் பொருட்டு விஷேட பிரிவொன்றை ஆரம்பிக்கவுள்ளேன். இத்திட்டத்தினூடாக எவராவது ஒரு ரூபாயாவது திருடுவார்களானால் அவர்கள் மக்களின் சாபத்துக்குள்ளாவார்கள்.
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சீனா, ஒபெக் நிதியம், குவைத் நிதியம், ஆசிய அபிவிருத்தி நிதியம் மற்றும் ஜப்பானிய அரசு ஆகியன முதலீடுகளை செய்துள்ளன. இத்திட்டத்துக்கான திட்டவரைவை புகழ்பெற்ற பொறியியலாளரான கலாநிதி குலசிங்க தயாரித்ததோடு முழுப்பங்களிப்பையும் எமக்கு வழங்கினார். ஆனால் அன்றைய அரசு இதனை முன்னெடுப்பதற்கு நிதியை பெற்றுத்தராமல் தடைகளைப் போட்டது. இதன்மூலம் நாட்டுக்கு அந்த அரசு பெரும் துரோகம் செய்தது.
ஐந்து வருடங்களுக்குப் பின்னர் புதிய நல்லாட்சி மலர்ந்தது. பின்னர் சீனாவின் நிதியுதவியுடன் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்தது. அன்றைய அரசுடன் இவ்விடயத்துக்காக பாரிய போராட்டத்துக்கு முகம் கொடுத்தேன். பல்வேறுபட்ட தடைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. விவசாயிகளின் கண்ணீரையும், ஏக்கத்தையும் முற்றாக களையவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இத்திட்டத்தை முன்னெடுத்தோம்.
இந்த விடயத்தில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த முனைய வேண்டாம். அப்படி தவறாகச் செயற்பட்டு பின்னர் கண்ணீர் வடிக்கும் நிலைக்குள்ளாக வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.



0 comments:
Post a Comment