கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு மர்க்கஸ் பிரதான வீதியின் பாலத்தின் நடுவில் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேறாறு மார்க்கஸ் பிரதான வீதி முதலாம், இரண்டாம் குலனி மற்றும் மத்ரஸா நகர் போன்ற கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியாகும், அப்பகுதி மக்கள் வைத்தியசாலை , சந்தை, மற்றும் கந்தளாய் நகருக்கும், அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் வீதியாக இவ்வீதி அமைந்துள்ளது.
இவ்வீதியில் பாதை அமைக்கப்பட்டு கிரவட் இடப்பட்டதற்கு பிறகு சுமார் பதினைந்து வருடங்களாக கிரவல் மற்றும் செப்பனிடப்படவுமில்லையெனவும் அப்பகுதி மக்கள் முறையிடுகின்றனர்.
கடந்த ஆறு மாதங்களாக வீதியின் பாலத்தின் நடுவில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் இரவு வேளைகளில் விபத்துகள் ஏற்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு வாகனங்கள் செல்ல முடியாத நிலையாலுள்ளதாகவும் முறையிடுகின்றனர்.
இவ்வீதியின் அவல நிலை தொடர்பாக கந்தளாய் பேராறு மேற்கு கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் இது எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லையெனவும் பிரதேச மக்களும், இளைஞர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இவ்வீதியில் ஒரு முச்சக்கர வண்டி கூட செல்லுவதற்கு சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் பயணிகள் மற்றும் தூர இடங்களில் இருந்து செல்வோர் மாற்று வழிகளை பயன்படுத்தி சிரமங்களையும் இக்கட்டான நிலைமைகளையும் எதிர்நோக்குவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நல்லாட்சி அரசு இப்பிரதேச மக்களின் போக்குவரத்து தேவைகளை மேற்கொள்ளுவதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வீதியின் குழியை புனரமைத்து தருமாறும் பிரதேச மக்களும், இளைஞர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment