பிரதான செய்திகள்

கொண்டவட்டான் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு

அம்பாறை மாவட்டத்தின் கொண்டவட்டான் விவசாய மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதுடன், சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுக்க, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதியும் வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை நகரிலிருந்து ஐந்து கிலோமீற்றர் தொலைவில் காணப்படும் கொண்டவட்டான் பிரதேசத்தில், சம்மாந்துறையைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள், 370க்கும் மேற்பட்ட ஏக்கர் வயற் காணிகளில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் சுமார் 75 வருடகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் இப்பிரதேசத்திலுள்ள 170க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானதென அறிவித்துள்ளதோடு, அங்கு நெற்செய்கை செய்ய முடியாதவாறு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடைவிதிப்பால், விவசாயிகள் நெற்செய்கை செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனை விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்து (29) பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கொண்டவட்டான் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடினார்.

இதன்போது, அம்பாறை மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் எம். விக்கிரமதிலக, விவசாயிகள், காணி உரிமையாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகளுக்குச் சொந்தமான குறித்த இக்காணிகள், வனப் பாதுகாப்புப் பிரதேசத்துக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதனை, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, விரைவில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து விடுவித்துத் தருவதாக, விவசாயிகளுக்கு இதன்போது வாக்குறுதியளிக்கப்பட்டது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment