கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் சந்தித்த போதே குறித்த கோரிக்கையினை தான் முன்வைத்துள்ளதாகவும் அவர் நேற்று (30) தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் குறித்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் போன்றவற்றுக்கு அந்த மூவாயிரம் ரூபா கொடுப்பனவு போதாமல் உள்ளது எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இதேவேளை வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பிலும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன். எனவே கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை உடனடியாக அதிகரிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தோற்றம் பெற்றதன் பின்னர் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. அதற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தனால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையினால் அங்கீகாரமளிக்கப்பட்டு மாகாண சபை நியதியச் சட்டம் மூலம் சட்டமாக்கப்பட்டது.
அதற்கமைவாக, கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் 3357 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மூவாயிரம் ரூபா வீதம் தற்போது கொடுப்பனவுள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது. முன்பள்ளி ஆசிரியர்கள் செய்கின்ற அர்ப்பணிப்பு, தியாகங்களுக்கு அவ்வாறானதொரு தொகை போதாமல் உள்ளது. எனவே அவர்களுக்குரிய கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் சுபையிர் மேலும் தெரிவித்தார்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 1834 முன்பள்ளிகளில் சுமார் 56152 சிறுவர்கள் கல்வி கற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது..

0 comments:
Post a Comment